

இங்கிலாந்தை 4-0 என்று புரட்டி எடுத்த இந்திய அணி 2016-ம் ஆண்டை ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியாக நிறைவு செய்துள்ளது.
2-ம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 15 புள்ளிகள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. மாறாக இங்கிலாந்து 0-4 தோல்விக்குப் பிறகு 5-ம் இடத்துக்கு சரிவடைந்துள்ளது.
இங்கிலாந்து தற்போது 101 புள்ளிகளுடன் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிக்குக் கீழே உள்ளது. இதில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டுமே 102 புள்ளிகள் பெற்றிருந்தாலும் தசம அடிப்படையில் பாகிஸ்தான் 3-ம் இடத்தில் உள்ளது.
ஐசிசி முதலிட அணியை நிர்ணயம் செய்தவற்கான கட்-ஆஃப் தேதி ஏப்ரல் 1, 2017 ஆகும். நம்பர் 1 அணிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசும், 2-ம் இட அணிக்கு 500,000 அமெரிக்க டாலர்கள் தொகையும் 3-ம் இட அணிக்கு 2 லட்சம் டாலர்களும் 4-ம் இட அணிக்கு 1 லட்சம் டாலர்கள் தொகையும் பரிசாகக் கிடைக்கும்.
2016-ல் ஆகஸ்ட் 21 முதல் அக்டோபர் 11 வரை ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் பிறகு இந்தியா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.