ஒரு சதம் கூட பதிவு செய்யாமல் 2022-ஐ நிறைவு செய்யும் ரோகித் சர்மா
சென்னை: நடப்பு 2022-ம் ஆண்டில் ஒரு சதம் கூட பதிவு செய்யாமல் ஆண்டை நிறைவு செய்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை காயம் காரணமாக அவர் மிஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார் ரோகித். அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை இரட்டை சதங்கள் பதிவு செய்த பேட்ஸ்மேனும் கூட. இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக அவர் காயத்தால் அணிக்குள் வருவதும், போவதுமாக உள்ளார். அதற்கு உதாரணமாக பல தொடர்களை சொல்லலாம். அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றதும் இந்திய அணி ஐசிசி தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. ஆனால், அதுவும் பொய்த்துப் போனது.
அதே நேரத்தில் அவர் நடப்பு ஆண்டில் பேட்டிங்கிலும் பெரிதாக சோபிக்கவில்லை. 2012-க்குப் பிறகு முதல் முறையாக அவர் சதம் பதிவு செய்யாமல் ஆண்டை நிறைவு செய்துள்ளார். ரசிகர்களால் ‘ஹிட் மேன்’ என அன்போடு அழைக்கப்படும் ரோகித், சதம் பதிவு செய்ய தவறியது ஏமாற்றமே. இது குறித்து ரசிகர்களும் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி உள்ளனர்.
நடப்பு ஆண்டில் 8 ஒருநாள், 2 டெஸ்ட் மற்றும் 29 டி20 என மொத்தம் 995 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 அரை சதங்கள் அடங்கும். எதிர்வரும் 2023-ல் ரோகித் சதம் விளாசுவார் என நம்புவோம். அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரோகித் ஸ்கோர் செய்யும் பெரிய நம்பர்களிலான ரன்கள் மிகவும் அவசியம்.
ரோகித் ஆண்டு வாரியாக பதிவு செய்த சதங்கள்:
- 2007 - 0
- 2008 - 0
- 2009 - 0
- 2010 - 2
- 2011 - 0
- 2012 - 0
- 2013 - 4
- 2014 - 1
- 2015 - 4
- 2016 - 2
- 2017 - 8
- 2018 - 7
- 2019 -10
- 2020 - 1
- 2021 - 2
- 2022 - 0
