

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதற்கிடையே காயம் காரணமாக துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
விசாகப்பட்டினத்தில் நடை பெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்திலும், மொகாலியில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. மும்பையில் இன்று தொடங்கும் 4-வது டெஸ்ட்டில் கோலி குழுவினர் வெற்றியையோ அல்லது டிராவையோ பதிவு செய்யும் பட்சத்தில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து தொடரை வெல்லலாம்.
இங்கிலாந்து அணி 2011, 2012, 2014-ம் ஆண்டுகளில் இந்தியா வுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்றிருந்தது என்பது குறிப் பிடத்தக்கது. மும்பை வான்கடே மைதானம் இங்கிலாந்து அணிக்கு சற்று ராசியானதுதான். அந்த அணி கடைசியாக இங்கு மோதிய இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
2012-ல் நடைபெற்ற போட்டியில் கெவின் பீட்டர்சன் 186 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார். வான்கடே மைதானத்தில் வெளி நாட்டு வீரர் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன்களாக இதுவே இன்றளவும் உள்ளது. மும்பை ஆடுகளம் சுழலுக்கு சாதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள் ளதால் கடந்த இருமுறை ஏற்பட்ட தோல்விகளுக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.
மொகாலியில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் விடுமுறையை துபையில் செல விட்டு உற்சாமாக திரும்பி உள்ளனர். அந்த அணியின் தொடக்க வீரரான ஹசிப் ஹமீது காயம் காரணமாக விலகி உள்ளதால் 24 வயதான கீட்டன் ஜென்னிங்ஸ் அறிமுக வீரராக கேப்டன் அலாஸ்டர் குக்குடன் களமிறங்கக்கூடும்.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் இந்த தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. புஜாரா, கோலி மற்றும் பின்கள வீரர்களே பேட்டிங்கில் பலம் சேர்த்து வருகின்றனர். விருத்திமான் சாஹா காயத்தில் இருந்து குணமடையாததால் பார்த்தீவ் படேலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
8 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ள அவர் மொகாலி டெஸ்ட்டில் தொடக்க வீரராக களமிறங்கி இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 109 ரன்கள் சேர்த்தார். இதற்கிடையே காயத்தில் இருந்து குணமடைந்துள்ள தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பி உள்ளதால் பார்த்தீவ் படேல் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படுவார் என தெரிகிறது.
ராஜ்கோட்டில் சதம் அடித்து இந்த தொடரை சிறப்பாக தொடங்கிய முரளி விஜய் அதன்பின்னர் சீரான ஆட்டத்தை தொடரவில்லை. ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவர் விக்கெட்டை பறிகொடுப்பது பலவீனமாக உள்ளது.
இதற்கிடையே துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே வலது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப் பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள் ளார். அதேவேளையில் முழங் காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக கூடுதல் வீரராக ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரஹானே இந்த தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 63 ரன்கள் மட்டுமே சேர்த்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஷமி விளையாடாத பட்சத்தில் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலும் ரஹானேவுக்கு பதிலாக கடந்த ஆட்டத்தில் அறிமுக வீரராகளுக்கு களமிறங்கிய கருண் நாயர் மீண்டும் அணியில் தொடரக்கூடும்.
சுழற்பந்தில் மூவர் கூட்டணி யான அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து வீரர்களுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர். இந்திய அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலேவில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் தோல்வியை சந்தித்திருந்தது.
அதன்பின்னர் சொந்த மண்ணில் நடைபெற்ற 16 டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை சந்திக்காமல் வளம் வருகின்றனர் விராட் கோலி குழுவினர். 16 போட்டிகளில் இந்திய அணி 12 வெற்றிகளையும், 4 டிராவையும் பதிவு செய்துள்ளது.
கடைசியாக இந்திய அணி 1985 முதல் 1987 வரையிலான காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 17 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை எதிர்கொள்ளாமல் இருந்தது. இந்த சாதனையை தற்போதைய இந்திய அணி சமன் செய்யக்கூடும்.
நேரம்: காலை 9.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.