Published : 20 Dec 2022 08:05 PM
Last Updated : 20 Dec 2022 08:05 PM
கோவை: கோவையில் நடந்து வரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரில், தமிழகத்துக்கு எதிராக முதல் நாள் ஆட்டத்தில் ஆந்திர அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்து நிதானமாக ஆடி வருகிறது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் 2022-23-ம் ஆண்டுக்கான போட்டிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. அதன்படி, தமிழகம் மற்றும் ஆந்திரா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் இன்று (டிச.20) தொடங்கியது. தமிழகம் அணிக்கு பாபா இந்திரஜித் தலைமை வகித்தார். சாய் சுதர்ஷன், ஜெகதீசன், பாபா அபராஜித், விஜய் சங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், அஜித் ராம், விக்னேஷ், வாரியர் ஆகியோர் களமிறங்கினர். ஹனுமன் விஹாரி தலைமையிலான ஆந்திரா அணியில் ரிக்க புவி, அபிஷேக் ரெட்டி, ரஷீது, கரண் ஷீண்டி, கிரிநாத், நிதிஷ்குமார் ரெட்டி, சோயப்முகமது கான், சாய்காந்த், அய்யப்பா பண்டாரு, லலித்மோகன் ஆகியோர் களமிறங்கினர்.
டாஸ் வென்ற ஆந்திரா அணியின் கேப்டன் ஹனுமன் விஹாரி பேட்டிங் தேர்வு செய்தார். அபிஷேக் ரெட்டி, கிரிநாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நிதானமாக ஆடிய கிரிநாத் 31 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்த நிலையில் சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒன் டவுன் வீரராக வந்த ரஷீது, அபிஷேக் ரெட்டியுடன் சேர்ந்து ரன் சேர்த்தார். நிதானமாக இந்த ஜோடி விளையாடினர். தவறான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினர். 105 பந்துகளில் 37 ரன்கள் குவித்த நிலையில் ரஷீது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹனுமன் விஹாரி, அபிஷேக் ரெட்டியுடன் சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய அபிஷேக் ரெட்டி 129 பந்துகளில் 85 ரன்கள் குவித்த நிலையில் வாரியர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்து ரிக்க புவி நிதானமாக ரன் சேர்த்தார். 21 ரன்கள் குவித்த நிலையில் கேப்டன் விஹாரி, விஜய் சங்கர் பந்துவீச்சில் அஜித் ராமின் அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 68 ரன்கள் குவித்த ரிக்கி புவி , சாய் கிஷோர் பந்துவீச்சில் கீப்பர் ஜெகதீசனால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். ஆட்ட நேர முடிவில் கரன் ஷீண்டி 55 ரன்களுடனும், சசிகாந்த் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆந்திரா அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்துள்ளது. பந்துவீச்சில் தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், வாரியர், அஜித்ராம், விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். நாளை 2-ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT