Published : 11 Dec 2016 11:16 AM
Last Updated : 11 Dec 2016 11:16 AM

விராட் கோலி அபாரம்: 3-வது இரட்டைசதம்; ஜெயந்த் யாதவ்வுடன் இரட்டை சதக்கூட்டணி

மும்பை டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிவரும் விராட் கோலி 4-ம் நாளான இன்று இரட்டை சதம் அடித்தார்.

இந்த ஆண்டின் 3-வது இரட்டைச் சதமாகும் இது. மே.இ.தீவுகள், நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்குப் பிறகு தற்போது இங்கிலாந்துக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்துள்ளார் விராட் கோலி. கேப்டனாக 3-வது இரட்டைச் சதம்.

இன்று காலை 451/7 என்று தொடங்கிய விராட் கோலி, ஜெயந்த் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து கேப்டனின் தளர்வான களவியூகம், தவறான பந்து வீச்சு மாற்றம் ஆகியவற்றினால் விரைவு ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

ஜெயந்த் யாதவ் ஆஃப் திசையில் அருமையான பவுண்டரிகளை அடித்தார். 84 ரன்களில் அவர் 12 பவுண்டரிகளை அடித்துள்ளார்.

விராட் கோலி 302 பந்துகளில் 200 ரன்களை 23 பவுண்டரிகளுடன் எடுத்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 66%. இன்று வந்தவுடனேயே பால் வீசிய பந்தை மிக அழகாக மிட் ஆனில் பவுண்டரி அடித்து 150 ரன்களைக் கடந்தார். பிறகு இங்கிலாந்து பந்து வீச்சு சரியாக அமையவில்லை. லெக் திசையில் கோலியின் பேடில் வீசி பவுண்டரிகளை வழங்கினர். முதல் ஒரு மணி நேரத்தில் இருவரும் இணைந்து 78 ரன்களை குவித்தனர்.

தற்போது விராட் கோலி, ஜெயந்த் யாதவ் இணைந்து 8-வது விக்கெட்டுக்காக 200 ரன்கள் சேர்த்துள்ளனர், இதுவும் ஒரு இந்திய சாதனையாக இருக்க வாய்ப்புண்டு.

தற்போது கோலி 203 ரன்களுடனும் ஜெயந்த் யாதவ் 90 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 567 ரன்கள்.

இங்கிலாந்தைக் காட்டிலும் இந்தியா 167 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்தின் எதிர்மறை அணுகுமுறைக்கு இன்று தகுந்த பாடம் கற்பித்தார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x