

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜென்டினா அணி. இதன் மூலம் அந்த அணியின் ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இந்தியாவின் கேரள மாநில ரசிகர்களும் அடங்குவர்.
இந்த சூழலில் அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் கேரள ரசிகர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மலப்புரம், திருச்சூர் என கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
அந்த வகையில் அந்த மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியில் இயங்கி வரும் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வரும் அர்ஜென்டினா அணியின் ரசிகர் ஒருவர் இலவசமாக சிக்கன் பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
திருச்சூரின் சேரூர் பகுதியில் அமைந்துள்ள ராக்லேண்ட் உணவகத்தில் இந்த ஏற்பாடு நடந்துள்ளது. “நான் மெஸ்ஸி மற்றும் அவர் விளையாடும் அர்ஜென்டினா அணியின் மிகப்பெரிய ரசிகன். ஒவ்வொரு அர்ஜென்டினா ரசிகரை போல நானும் அந்த அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பினேன். இந்த முறை கோப்பையை வெல்வதற்கான தகுதி உடைய வீரர்களில் அவர் முதல் நிலையில் இருப்பவர். நல்வாய்ப்பாக அவர் கோப்பையை வென்று விட்டார்” என அந்த உணவகத்தின் உரிமையாளர் ஷிபு தெரிவித்துள்ளார். அந்த உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் மெஸ்ஸியின் ரசிகர்கள் தானாம்.
காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகருமான ஷாஃபி பரம்பில் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அவர்தான் பிரியாணி வழங்கும் பணியை தொடங்கியும் வைத்துள்ளார்.
முதலில் உணவகத்திற்கு வரும் 1,000 பேருக்கு தான் இலவசமாக பிரியாணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கூட்டம் அதிகளவில் கூடிய காரணத்தால் 1,500 பேருக்கு உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போலவே கேரள மாநிலம் மலப்புரத்திலும் அர்ஜென்டினா வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.