ENG vs PAK | அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்டுகளை அள்ளிய இங்கிலாந்து இளம் வீரர் - பாக். ஒயிட்வாஷ் ஆகுமா?

ரெஹன் அகமது
ரெஹன் அகமது
Updated on
2 min read

கராச்சி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் இங்கிலாந்து அணியின் இளம் பந்துவீச்சாளர் ரெஹன் அகமது (Rehan Ahmed). முதல் இன்னிங்ஸில் அவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஓட்டுமொத்தமாக இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

இவர் கடந்த ஜனவரி 2022-ல் நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருந்தார். இந்தச் சூழலில் 18 வயதான அவர் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இளம் பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

வலது கை லெக்-பிரேக் பவுலரான அவர் இங்கிலாந்து நாட்டில் உள்ளூர் அளவில் நடைபெறும் டி20, முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர். அவரது தந்தை நயீம் அகமது மற்றும் இரண்டு சகோதரர்களும் கிரிக்கெட் வீரர்கள்தான். அவரது தந்தையார் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து, இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்.

கராச்சியில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் அகமது சேர்க்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உட்பட 5 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 304 மற்றும் 216 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 354 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அந்த அணி விரட்டி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 55 ரன்கள் எடுத்தால் அந்த அணி வெற்றி பெற்றுவிடும்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது. தற்போது மூன்றாவது போட்டியிலும் வெற்றியை கிட்டத்தட்ட இங்கிலாந்து அணி நெருங்கிவிட்டது. இதில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் 3-0 என ஒயிட்வாஷ் செய்து அசத்தும் இங்கிலாந்து அணி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in