

விளம்பர நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள ஜப்பான் வந்தார் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மார். விமான நிலையத்தில் நெய்மாரைக் காண ரசிகர்கள் குழுமியதால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
சுமார் 700 ரசிகர்கள் நெய்மார் பெயரைக் கூச்சலிட்டபடி அவரை நோக்கி கையை அசைத்தனர். ஆனால் அவர் டிவி ஸ்டுடியோ ஒன்றிற்கு விரைந்தார். அங்கு அவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நெய்மார் கூறும்போது, “என்னுடைய முதுகுக் காயம் குணமடைந்து வருகிறது, விரைவில் அணி வீரர்களுடன் இணைவேன்.
புனர்வாழ்வு சிகிச்சையை விரைவில் முடித்து 100% உடற்தகுதியை விரைவில் எட்டுவேன். அடுத்த சீசனில் முழு உத்வேகத்துடன் களமிறங்குவேன். ஐரோப்பாவில் விளையாடுவது எப்போதும் என் கனவாகவே இருந்து வந்துள்ளது, இங்கும் நிறைய வெற்றிகளைக் குவிக்கவே விரும்புகிறேன்.
நான் உலகின் தலைசிறந்த வீரராக விரும்புகிறேன் என்பதை விட பிரேசில் வெற்றி பெற உதவும் ஒரு சிறந்த வீரராகவே இருக்க விரும்புகிறேன்” என்ற நெய்மாரிடம் ஜப்பானியப் பெண்கள் எப்படி என்று கேட்டதற்கு, ‘ஜப்பானியப் பெண்கள் அழகாகவே இருக்கின்றனர், ஆனால் நான் ஒரு பிரேசில் நாட்டுக்காரன் எனவே பிரேசில் பெண்களைத்தான் எனக்குப் பிடிக்கும்’ என்று ஒரே போடாகப் போட்டுவிட்டுச் சென்றார் நெய்மார்.