

லுசைல்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்றது அர்ஜென்டினா. இதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ்.
30 வயதான அவர் கடந்த 2018 உலகக் கோப்பை தொடரின் போது அர்ஜென்டினா அணியின் கோடாடான கோடி ரசிகர்களில் ஒருவராக பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அணிக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். இப்போது அவர் களத்தில் கோல் கீப்பராக களம் கண்டு தன் அணி கோப்பை வெல்ல உதவியுள்ளார். வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு உதாரணமாக உள்ளது அவரது இந்த மாற்றம்.
கடந்த 2021-ல் தனது முதல் சர்வதேச போட்டியில் அவர் விளையாடி இருந்தார். கோபா அமெரிக்கா தொடரிலும் சிறப்பாக விளையாடிய அவர் சிறந்த கோல் கீப்பர் விருதை வென்றார். தொடர்ந்து நடப்பு உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடித்தார்.
கிளப் அளவிலான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேசிய அணியில் இடம் பிடித்தவர். முதலில் உள்நாட்டு அளவிலான கால்பந்து கிளப் ஒன்றில் இளையோர் பிரிவில் விளையாடி வந்தார். பின்னர் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடும் அர்சேனல் அணியில் இணைந்தார். தொடர்ந்து 2012 முதல் 2020 வரையில் அந்த அணியின் சீனியர் அணியில் இடம் பிடித்தார். இடையில் சில நேரங்களில் லோன் முறையில் பிற அணிகளுக்காகவும் விளையாடினார்.
2019-20 சீசன் அவரது விளையாட்டு கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது. கடந்த 2020 முதல் அவர் ஆஸ்டன் வில்லா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதி மற்றும் பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதி என இரண்டிலும் பெனால்டி ஷூட்-அவுட்டின் போது அபாரமாக செயல்பட்டு எதிரணிக்கு கோல் விட்டுக் கொடுக்காமல் காத்துள்ளார். அதிலும் இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் அணி மேற்கொண்ட கோல் முயற்சி ஒன்றை அபாராமக தடுத்து அசத்தியிருப்பார். அதன் காரணமாக தொடரின் சிறந்த கோல் கீப்பருக்கான ‘கோல்டன் கிளவ்’ விருதை வென்றுள்ளார்.
‘தங்கப் பந்து’ விருதை மெஸ்ஸி வென்றுள்ளார். தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை என்ஸோ பெர்னாண்டஸ் வென்றார்.