

லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் இந்திய நடிகை தீபிகா படுகோன்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், ஷாருக் கான் மற்றும் ஜான் ஆபிரஹாமுடன் இணைந்து ‘பதான்’ படத்தில் நடித்திருக்கிறார். ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தவிர பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சனுடனான ‘புராஜெக்ட் கே’, கணவர் ரன்வீர் சிங்கின் ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களிலும் தீபிகா நடித்து வருகிறார்.
‘பதான்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் தீபிகா, காவி நிற பிகினியில் கவர்ச்சியாகவும், ஷாருக், பச்சை நிற ஆடை அணிந்தும் டூயட் பாடுகின்றனர். இதனால் காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாக கூறி மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இறுதிப் போட்டி நடைபெறும் லுசைல் மைதானத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் இகர் கசியஸ் உடன் இணைந்து அறிமுகம் செய்து வைத்திருந்தார்.