

லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன. இந்த போட்டியை நேரில் பார்த்து மகிழும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி கத்தார் சென்றுள்ளார்.
அவர் இறுதிப் போட்டி நடைபெற்று வரும் லுசைல் மைதானத்தில் இருந்து சமூக வலைதளத்தில் சில பதிவுகளை பதிவிட்டிருந்தார். அதில் மைதானத்தில் மெஸ்ஸி அலை வீசுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது மெஸ்ஸியின் ரசிகர்கள் அதிகளவில் மைதானத்தில் குழுமி உள்ளதை தெரிவிக்கும் விதமாக அது அமைந்துள்ளது.
இந்த போட்டிதான் மெஸ்ஸியின் கடைசி போட்டி. அதனால் அவர் இதில் வெற்றி பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். லுசைல் மைதானத்தில் மொத்தம் 88000 ரசிகர்கள் போட்டியை காணலாம். அதில் அதிகளவு அர்ஜென்டினா ஆதரவாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமா நடிகர் ரன்வீர் சிங்கும் இந்த போட்டியை நேரில் பார்த்து வருகிறார். அவருடனும் இணைந்து ரவி சாஸ்திரி ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். இந்தப் போட்டியில் 23-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் பதிவு செய்திருந்தார் மெஸ்ஸி. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவர் பதிவு செய்த 6-வது கோலாக இது அமைந்தது.