

உலகக் கோப்பையை வெல்வதில் கிடைக்கும் பொருளாதாரப் பலன் பிரான்ஸை விட அர்ஜெண்டினாவுக்கே அதிகமாக இருக்கும் என்கிறார் அதன் வரலாற்று பின்னணிகளை ஆராய்ந்த கல்வியாளர்.
இங்கிலாந்தில் உள்ள சர்ரே பல்கலைக்கழகத்தின் மாக்ரோ மெல்லோ அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, உலக கால்பந்து சாம்பியன் பட்டத்தை வெல்வதால் இரண்டு காலாண்டு பொருளாதார வளர்ச்சியில் கூடுதலாக 0.25 சதவீதத்தை அனுபவிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை வெற்றியாளர் அதிக அளவில் சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்க முடியும். அதன் மூலம், ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்பது மெல்லோவின் கூற்று. இதற்கு அவர், 2002-ல் உலக கோப்பையை பிரேசில் வென்ற பிறகு வெளிநாட்டு விற்பனையில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டாக கூறுகிறார்.
அதேபாணியில் பிரேசிலைப் போலவே பயனடையக்கூடிய நாடுகளில் பிரான்ஸை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அர்ஜெண்டினாவே உள்ளது. ஏனெனில் பிரான்ஸ் ஏற்கெனவே உலக கோப்பையை ஜெயித்து கையில் வைத்துள்ளது. எனவே, அதன் வெற்றி என்பது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பெரிதாக இருக்காது. ஆனால், அர்ஜெண்டினாவின் வெற்றி மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்த முடியும்.
பிரான்ஸ் எரிசக்தி நெருக்கடி, வேலைநிறுத்த போராட்டங்களால் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. அதேபோன்று, அர்ஜெண்டினாவிலும் பணவீக்கம் 100%க்கு அருகில் உள்ளது. மேலும், அடுத்த ஆண்டில் பயிர் ஏற்றுமதி குறையும் அளவுக்கு வறட்சியில் அந்த நாடு சிக்கி தவித்து வருகிறது.