

டென்னிஸ் உலகில் முடிசூடா ராணியாக விளங்கும் செரீனா வில்லியம்ஸ் கடந்த வியாழக்கிழமை அன்று ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனரான அலெக்சிஸ் ஒஹானியனுடன் தனக்கு நிச்சயம் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய ரெட்டிட் அதிகாரபூர்வ கணக்கில் 'isaidyes' (நான் சம்மதம் என்றேன்) என்ற ஹேஷ்டேகில் ஒரு கவிதையுடன் இதைப் பகிர்ந்துள்ளார் செரீனா.
35 வயதான செரீனாவும், 33 வயது அலெக்சிஸும் தங்களுடைய திருமணத் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.
செரீனா தன்னுடைய திருமண நிச்சயம் குறித்து வெளியிட்டுள்ள கவிதை:
''அன்று என் வீட்டுக்கு வர சிறிது தாமதமானது;
யாரோ எனக்காக ஒரு பையைத் தயார் செய்து வைத்திருந்தார்கள்.
ரோமுக்குச் செல்வதற்காக ஒரு வண்டியும் காத்திருந்தது.
எங்களின் நட்சத்திரங்கள் அங்கே ஒன்று சேர்ந்தன.
இப்பொழுது முழு வட்டமாக இருக்கிறது.
முதன்முதலில் எதிர்பாராமல் சந்தித்தோம்,
இம்முறை அவர் வாய்ப்பை எதிர்நோக்கவில்லை
தேர்வை ஏற்படுத்திக்கொண்டார்
முழங்காலிட்டு 4 வார்த்தைகளை சொன்னார்.
நான் சம்மதம் என்றேன்'' (isaidyes).
இதற்கு தன் ரெட்டிட் கணக்கில் பதிலளித்த அலெக்சிஸ், ''நீ இந்த பிரபஞ்சத்தின் மகிழ்ச்சியான மனிதனாக என்னை மாற்றிவிட்டாய்'' என்று பதிவிட்டுள்ளார்.
2016-ம் வருட விம்பிள்டன் கோப்பையை வென்ற செரீனா வில்லியம்ஸ், தன்னுடைய டென்னிஸ் வாழ்க்கையில் 71 ஒற்றையர் கோப்பைகளை வென்றுள்ளார். டென்னிஸ் தரவரிசையில் 186 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தவர். ஏராளமான அமெரிக்க ஓபன், விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் கோப்பைகளைக் கைப்பற்றியவர் செரீனா.
ரெட்டிட் நிறுவனம் கலிஃபோர்னியாவில் தொடங்கப்பட்ட பிரபல சமூக ஊடகம் என்பது குறிப்பிடத்தக்கது.