கருண் நாயர், ஜெயந்த் யாதவ் வெற்றிக்கு கோலி, அனில் கும்ப்ளே ஏற்படுத்திய சூழலே காரணம்: திராவிட் பெருமிதம்

கருண் நாயர், ஜெயந்த் யாதவ் வெற்றிக்கு கோலி, அனில் கும்ப்ளே ஏற்படுத்திய சூழலே காரணம்: திராவிட் பெருமிதம்
Updated on
1 min read

முச்சத நாயகன் கருண் நாயர் மற்றும் ஜெயந்த் யாதவ் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதற்கு கோலி, கும்ப்ளே இணை ஏற்படுத்திய சூழ்நிலையே காரணம் என்று ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏ பயிற்சியாளரான ராகுல் திராவிட், கருண்நாயரை ஏ அணியிலும் ராஜஸ்தான் ராயல்ஸிலும், டெல்லி டேர் டெவில்ஸிலும் ஏற்கெனவே பார்த்தவர்.

இது குறித்து ராகுல் திராவிட் கூறியதாவது:

இந்தியா ஏ அணி அமைப்பிலிருந்து இந்த இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் வந்து சிறப்பாக ஆடுவதை நினைக்க மகிழ்ச்சியளிக்கிறது. தேசிய மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சூழலுக்கு இவர்கள் செலுத்தும் அஞ்சலியிது என்று நினைக்கிறேன். சவுகரியமாக தங்களை உணர்ந்து நேரடியாக சிறப்பாக ஆடுகின்றனர். விராட் கோலி, அனில் கும்ப்ளே ஏற்படுத்திய சூழ்நிலைக்கு நன்றி. அதன் முடிவுகளை இன்று நாம் பார்த்து வருகிறோம். இதில் பங்குபெற்றிருப்பது பெருமையளிப்பதாக எனக்கு உள்ளது.

முதலில் சதம் எடுத்து பிறகு அதையே முச்சதமாக மாற்றிய விதம் அபாரமானது. இவரது திறமைகள் குறித்து இந்த இன்னிங்ஸ் பேசும் அதே வேளையில் அவரது அவா, ஆசை பெரிய அளவில் நமக்குத் தெரியவந்துள்ளது. இதுதான் முக்கியமான விஷயம். நான் இந்திய கிரிக்கெட் உள்ள நிலையை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். இளம் வீரர்கள் கடந்து வரும் பாதை அருமையாக உள்ளது. கருண் நாயர் இங்கிருந்து பெரிய அளவுக்குச் செல்ல வேண்டும். அவரிடம் இதற்கான திறமை உள்ளது.

கருண், ஜெயந்த், ராகுல் ஆகியோரை இந்த நிலையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் எப்போதும் தேசிய அணியின் எதிர்பார்ப்பு என்ன என்பதை கேட்டறிந்தே செயல்படுகிறோம். அவர்களுக்கு ஆல்ரவுண்டர்கள் தேவையா ஆல்ரவுண்டர்களை ஜூனியர் மட்டத்தில் தயார் படுத்துகிறோம்.

அண்டர் 19, ஏ அணிகள் போட்டி முடிவுகளைப் பற்றியதாக இல்லை. எங்களுக்கு அவர்கள் ஆடும் ஆட்டத்தின் முடிவு முக்கியமானது என்றாலும் வாய்ப்புகளை அளித்து தேசிய அளவுக்குத் தயார் படுத்துவதே இதை விடவும் சிறப்பான பணி என்று கருதுகிறோம். வீரர்களாக உருவாக்குவது மட்டும் நோக்கமல்ல. ஒரு அர்த்தமுள்ள கிரிக்கெட் வாழ்வு அவர்களுக்கு அமைவதும் குறிக்கோளாகும்.

இப்படியும் இருக்கலாம், அண்டர் 19 மட்டத்தில் சரியாக ஆட முடியாத வீரர்கள் கூட இந்தியாவுக்காக ஆடி உங்கள் எதிர்கால நட்சத்திரமாகலாம். எனவே அண்டர் 19, ஏ அணிகளில் ஆடுவது தேசிய அணிக்குள் நுழைந்து சிறப்பாக ஆடுவதற்கான களமாகும்.

இவ்வாறு கூறினார் திராவிட்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in