

பிரேசிலியா: பிரேசில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தனது கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டத் தொடர் கத்தாரில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. உலக அளவில் கால்பந்தாட்ட ரசிகர்களின் விருப்பமான அணிகளில் ஒன்றான பிரேசில், குரோஷியாவிடம் தோல்வியுற்று காலிறுதியில் வெளியேறியது.
இந்தியா உலக கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், பல்வேறு மாநிலங்களிலும் கால்பந்தாட்ட கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுகல் அணிக்கு இந்திய ரசிகர்களின் ஆதரவு பலமாக இருந்து வந்தது. அதுவும் குறிப்பாக கால்பந்தாட்டத்தை அதிகம் விரும்பும் கேரளாவில் அர்ஜென்டினா, பிரேசில் அணிக்கு ஆதரவாக ரசிகர்கள் பேனர்கள் வைத்து அசத்தினர்.
இதற்கிடையில், உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு பிரேசிலுக்காக விளையாடுவது சந்தேகம் என அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் சந்தேகம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவர் தனது கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நெய்மர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நெய்மரின் கட் அவுட்டுக்கு முன்னால் ஜெர்சி எண்ணை அணிந்திருக்கும் கேரள ரசிகர்கள் படத்தை பதிவிட்டு, “உலகில் உள்ள அனைத்து இடங்களில் இருந்தும் அன்பு கிடைக்கிறது. மிக்க நன்றி கேரளா... இந்தியா.” என்று பதிவிட்டுள்ளார்.
நெய்மரின் இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தங்களது ஆதர்ச நாயகன் நன்றி தெரிவித்திருப்பது கேரள ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.