

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடக அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது.
தமிழ்நாடு - கர்நாடக அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து. இதில் கர்நாடக அணி தங்கள் முதல் இன்னிங்ஸில் 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து ஆடிய தமிழ்நாடு அணி, முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களை எடுத்திருந்தது. தினேஷ் கார்த்திக் 31 ரன்களுடனும், அபினவ் முகுந்த் 3 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை ஆட்டத்தைத் தொடர்ந்த தமிழ்நாடு அணி, 152 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டம் இழந்தது. முதல் நாளில் 31 ரன்களைச் சேர்த்திருந்த தினேஷ் கார்த்திக், மேற்கொண்டு ரன்கள் எதையும் சேர்க்காமல் அவுட் ஆக, மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களான அபினவ் முகுந்த் 17 ரன்களிலும், பாபா அபராஜித் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். கர்நாடக அணியின் அரவிந்த் 3 விக்கெட்களையும், வினய் குமார், கோபால் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
தமிழ்நாடு அணியை விட 64 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடக அணி இம்முறையும் திணறியது. தொடக்க ஆட்டக்காரரான சமர்த் (10 ரன்கள்), கவுனைன் அப்பாஸ் (15 ரன்கள்), மணிஷ் பாண்டே (0), ஸ்டூவர்ட் பின்னி (0), கருண் நாயர் (12 ரன்கள்) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். கே.எல்.ராகுல் மட்டும் ஓரளவு பொறுப்புடன் விளையாடி 77 ரன்களைச் சேர்க்க, கர்நாடக அணி 2-வது இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தமிழ்நாடு அணியில் சிறப்பாக பந்துவீசிய விக்னேஷ் 13 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். நடராஜன் 3 விக்கெட்களையும், அஸ்வின் கிறிஸ்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெற்றிபெற 87 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த தமிழ்நாடு அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. சூர்யபிரகாஷ் 9 ரன்களிலும், அபராஜித் 18 ரன்களிலும், காந்தி 2 ரன்களிலும் அவுட் ஆக 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் என்று தத்தளித்தது. ஆனால் அதற்கு பிறகு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் (41 ரன்கள்), பாபா இந்திரஜித்தும் (16 ரன்கள்) சேர்ந்து அணியை வெற்றிப் பதையில் அழைத்துச் சென்றனர். 19.3 ஓவர் களில் 87 ரன்களைக் குவித்த தமிழ்நாடு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மும்பை - ஐதராபாத் அணி களுக்கு இடையிலான மற்றொரு காலிறுதிப் போட்டியில் மும்பை அணி 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி நேற்று ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் தன்மய் அகர்வால் அதிகபட்சமாக 63 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். எஸ்.பத்ரிநாத் 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.