

சட்டோகிராமில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இந்திய அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சுப்மன் கில் (110) தன் டெஸ்ட் முதல் சதத்தை விளாச, செடேஷ்வர் புஜாரா (102 நாட் அவுட்) தனது 19-வது டெஸ்ட் சதத்தை 130 பந்துகளில் விளாசி தன் டெஸ்ட் வாழ்க்கையில் குறைந்த பந்தில் சதம் எடுத்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்திய அணி மொத்தம் 513 ரன்களை வங்கதேசத்திற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. சுப்மன் கில், ராகுல் தொடக்க ஜோடி 70 ரன்களைச் சேர்க்க அதன் பிறகு புஜாரா - சுப்மன் கில் ஜோடி 113 ரன்களை 2வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். செடேஷ்வர் புஜாரா பொதுவாக நிதானித்து ஆடுபவர்தான் முதல் இன்னிங்சில் ‘ட்ரிக்கான’ பிட்சில் 203 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்து தைஜுலின் அருமையான பந்தில் பவுல்டு ஆகி தன் நீண்ட நாளைய சத வளர்ச்சியைப் போக்க முடியாமல் ஆட்டமிழந்தார்.
ஆனால், இன்று வந்தது முதலே கொஞ்சம் ரன் வாய்ப்புகளை பயன்படுத்தி ஆடினார். 86 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் அரைசதம் கண்ட புஜாரா, அடுத்த 44 பந்துகளில் 52 ரன்களை விளாசி 130 பந்துகளில் 102 ரன்கள் என்று தன் 19-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். 2019-க்குப் பிறகு அவர் எடுக்கும் சதம் விரைவு சதமாக அமைந்தது. இவர் சதமெடுத்தவுடன் ராகுல் டிக்ளேர் செய்தார். விராட் கோலி 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வங்கதேசத் தரப்பில் கலீத் அகமது 1 விக்கெட்டையும், மெஹதி ஹசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்று இன்னும் 8-9 ஓவர்களே உள்ள நிலையில் 513 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு வங்கதேச அணி தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய நிலையில் உள்ளது.
முன்னதாக, குல்தீப் யாதவ் தன் 5-வது விக்கெட்டைக் கைப்பற்ற வங்கதேச அணி தன் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்குச் சுருண்டது. அதன்பிறகு ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் மீண்டும் 23 ரன்களில் புல் ஷாட்டில் கையில் கேட்ச்சைக் கொடுத்து விட்டு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், முதல் இன்னிங்சில் 20 ரன்களில் ஆட்டமிழந்த சுப்மன் கில், இந்த இன்னிங்சில் கவனமாக ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் முதல் சதத்தை எடுத்தார். அவர் 152 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 110 ரன்கள் எடுத்து, மெஹதி ஹசன் பந்தை இன்னொரு சிக்சருக்கு முயன்றபோது டாப் எட்ஜ் ஆகி கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
இன்று கவனமாகத் தொடங்கிய சுப்மன் கில் பிறகு கொஞ்சம் தைரியமாக ஆட ஆரம்பித்தார். 84 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்ட சுப்மன் கில் அதன் பிறகு கொஞ்சம் ஆக்ரோஷத்தைக் கூட்டி 147 பந்துகளில் சதம் கண்டார். இதில் 10 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும். சதத்துக்கு முன்னால் லிட்டன் தாஸை ஒரு பெரிய சிக்சரை விளாசினார். 95 ரன்களிலிருந்து ரிவர்ஸ் ஸ்வீப்பில் 99 ரன்களுக்கு வந்தார். சதத்தை நெருங்குகிறோம் என்று பதற்றப்படமால் அதே ஓவரில் மெஹதியை ஏறி வந்து லாங் ஆனில் பவுண்டரி அடித்து தன் முதல் சதத்தை ஸ்டைலாக எடுத்து முடித்தார். 104 ரன்களிலிருந்து மெஹதியை மீண்டும் ஒரு பெரிய சிக்சரை அடித்து 110 ரன்கள் எடுத்ததுடன் அதே ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
கடினமான பிட்சில் அருமையான இன்னிங்ஸை ஆடி சதம் எடுத்துள்ளார் சுப்மன் கில். ரோஹித் சர்மா அடுத்த டெஸ்ட்டுக்கு வந்தால் இவரை அணியிலிருந்து நீக்க முடியுமா? ராகுல் திராவிட்டுக்கு பெரிய தலைவலி காத்திருக்கிறது.