

மும்பை: கோவா அணிக்காக ஆடிவரும் அர்ஜுன் டெண்டுல்கர் தன் அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதம் கண்டு தந்தையைப் போல் மகன் என்று கொடிநாட்டியுள்ளார். ஆனால் ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் மகன் என்பதாலேயே எப்போதும் தன் மகன் மீது அதீத கவனம் செலுத்தப்பட்டு வருவதால் அர்ஜுனின் குழந்தைப் பருவம் ஒரு சாதாரணமான குழந்தைப் பருவமாக இல்லை என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். ஆகவே, மகனுக்கு நெருக்கடி கொடுக்காதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் சச்சின்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் ரஞ்சி போட்டியிலேயே அர்ஜுன் டெண்டுல்கர் 207 பந்துகளைச் சந்தித்து 107 ரன்களை எடுத்து தலைப்புச் செய்தியானார். இந்த இன்னிங்சில் 16 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் விளாசினார் அர்ஜுன். தந்தையான ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தன் முதல் ரஞ்சி போட்டியிலேயே தன் 15 வயதிலேயே குஜராத் அணிக்கு எதிராக வான்கடேயில் சதம் கண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஊடகங்கள் அர்ஜுன் டெண்டுல்கர் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம், ஒரு புகழ்பெற்ற வீரரின் மகன் என்பதாலேயே அர்ஜுனுக்கு இயல்பான குழந்தைப் பிராயம் இல்லாமல் போனது என்று சச்சின் ஊடகங்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இன்போசிஸ் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சச்சின் கூறியதாவது: “அர்ஜுன் ஒரு நார்மலான குழந்தைப் பிராயத்தை அனுபவிக்கவில்லை. ஒரு கிரிக்கெட் வீரரின் மகனாக அர்ஜுன் நிச்சயம் பல கடினங்களைச் சந்தித்துள்ளார். நான் ஓய்வு பெற்ற பிறகு ஊடகங்கள் என்னைக் கவுரவித்து ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தபோதே நான் ‘அர்ஜுன் மீது அழுத்தம் ஏற்ற வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டேன். அர்ஜுன் கிரிக்கெட்டை நேசிக்கட்டும். அவனுக்கு அந்த வாய்ப்பை வழங்குங்கள் என்று நான் அப்போதே கேட்டுக் கொண்டேன்.
இப்போது கோவா அணிக்காக சதம் எடுத்ததை வைத்து நிறைய அறிக்கைகள் வெளியாகின்றன. அர்ஜுனை பிரஷர் படுத்தாதீர்கள், நான் ஆடும்போது என் பெற்றோரிடமிருந்து எனக்கு எந்தவித அழுத்தமும் வந்ததில்லை. என்னை நான் சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ள என் பெற்றோர் என்னை அனுமதித்தனர்.
எதிர்பார்ப்புகளின் அழுத்தங்கள் எனக்கு இல்லை. நான் எப்படி என்னை கிரிக்கெட் வீரனாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஊக்கமும் ஆதரவும் மட்டுமே எனக்கு இருந்தது. இதையேதான் அர்ஜுனுக்கும் நான் விரும்புகிறேன். இதைத்தான் நான் அவனிடமும் கூறிவருகிறேன், ஆனால் அது சவாலானதுதான்” என்று கூறினார் சச்சின் டெண்டுல்கர்.
சதம் எடுத்ததோடு ராஜஸ்தானுக்கு எதிராக 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் அர்ஜுன். மஹிபால் லோம்ரோர் (63), சல்மான் கான் (40) ஆகியோரை வீழ்த்தினார் அர்ஜுன் டெண்டுல்கர்.