

சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் குவித்து ஆட்டம்இழந்தது. தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 2-வதுநாள் ஆட்டத்தில் 8 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்தது.
சட்டோகிராமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியஅணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயஸ் ஐயர் 82 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 133.5 ஓவர்களில் 404 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஸ்ரேயஸ் ஐயர் 86 ரன்னில் எபாதத் ஹோசைன் பந்தில் போல்டானார். ரவிச்சந்திரன் அஸ்வின் 113 பந்துகளில், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 58 ரன்களும் குல்தீப் யாதவ் 114 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 8-வது விக்கெட்டுக்கு இவர்கள் கூட்டாக 87 ரன்கள் விளாசியிருந்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. நஜ்முல் ஹோசைன் ஷாண்டோ 0, ஜாகிர்ஹசன் 20, லிட்டன் தாஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தனர். யாசிர் அலி 4 ரன்னில் உமேஷ் யாதவ் பந்தில் போல்டானார். முஷ்பிகுர் ரஹீம் (28), கேப்டன் ஷகிப் அல் ஹசன் (3), நூருல் ஹசன் (16), தைஜூல் இஸ்லாம் (0) ஆகியோரை குல்தீப் யாதவ் வெளியேற்றினார்.
நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணி 44 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. மெஹிதி ஹசன் 16, எபாதத் ஹோசைன் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, மொகமது சிராஜ் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். கைவசம் 2 விக்கெட்கள் இருக்க 271 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது வங்கதேச அணி.