

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்க்கு 310 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர் அசார் அலி 139 ரன்களுடனும், மொகமது ஆமிர் அதிரடி முறையில் 6 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர்.
முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது போலவே இன்றும் 50 ஓவர்கள் மட்டுமே சாத்திமானது. இதில் அசார் அலி சதம் கண்டார். பிரிஸ்பனில் 490 ரன்கள் இமாலய இலக்கை விரட்டி வெற்றிக்கு அருகில் கொண்டு நிறுத்திய சத நாயகன் ஆசாத் ஷபிக் அரைசதம் கண்டார். இருவரும் சுமார் 42 ஓவர்கள் ஆஸ்திரேலியாவை வெறுப்பேற்றி 115 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
பிறகு புதிய பந்து எடுக்கப்பட்டவுடன் ஆசாத் ஷபிக் 50 ரன்களில் பேர்ட் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, சர்பராஸ் அகமது 10 ரன்களில் ஹேசில்வுட் பொறியில் சிக்கி ஆட்டமிழந்தார்.
மொகமது ஆமிர் களமிறங்கி பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் இரண்டு நல்ல இன்னிங்சை ஆடியது போல் இன்றும் அருமையான ஷாட்கள் மூலம் 6 பவுண்டரிகளை மிகவும் வலுவான களவியூகம், ஆக்ரோஷ பந்து வீச்சுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.
அசார் அலியின் 12வது டெஸ்ட் சதமாகும் இது, அபாரமான பொறுமை, நல்ல உத்தி என்று அவர் ஆஸ்திரேலிய பந்து வீச்சின் பொறுமையை சோதித்தார்.
இடையே ஷபிக், அசார் அலி பேட் செய்த போது விக்கெட் விழாத வெறுப்பில் ரிவியூ ஒன்றை ஷபிக்கிற்கு விரயம் செய்தது ஆஸ்திரேலியா.
இதன் பிறகு பேர்ட் பந்தை ஷபிக் நேராக டிரைவ் செய்ய பந்து அவர் கையில் பட்டு ஸ்டம்பில் பட்டது. அசார் அலி விரைவில் கிரீசிற்குள் வந்தார், ஆனால் திரையில் அசார் அலி அவுட் என்று காட்டப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. பிறகு திருத்திக் கொள்ளப்பட்டது.
மொத்தம் இரண்டு நாட்களில் 78 ஓவர்கள் வீச முடியாமல் மழை தடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி 310/6 என்று உள்ளது. இன்றும் ஆட்டம் உள்ளூர் நேரம் 3.30க்கும் மேல் மழையால் தடைபட்டது.
400 ரன்களை எடுத்து, வார்னர், ஸ்மித்தை விரைவில் பெவிலியன் அனுப்பினால் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
ஆஸ்திரேலிய அணியில் ஜேக்சன் பேர்ட் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் நேதன் லயன் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.