FIFA WC 2022 | மொராக்கோவை வீழ்த்தி பிரான்ஸ் மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

FIFA WC 2022 | மொராக்கோவை வீழ்த்தி பிரான்ஸ் மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Updated on
1 min read

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இன்று நள்ளிவு 12.30 மணிக்கு தோகாவின் அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியானது, முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மொராக்கோ அணியை எதிர்கொண்டது. உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மொராக்கோ அணி மீதும், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மீதும் சமமான எதிர்ப்பார்ப்பு நிலவியது.

அந்த பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல், ஆட்டத்தின் 5வது நிமிடமே பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோல் அடித்து அசத்தினார். ஆரம்பமே பிரான்ஸ் தனது தாக்குதலை தொடங்க, மொராக்கோவால் இதை சமாளிக்க முடியவில்லை. சொல்லப்போனால், நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் மொராக்கோ எதிரணியின் கோலை விட்டுக்கொடுத்தது இதுவே முதல்முறை. இதுவரை எந்த அணியும் நடப்பு தொடரில் மொராக்கோவுக்கு எதிராக கோல் அடிக்கவில்லை. அந்த அளவுக்கு பிரான்ஸ் அதிரடியாக ஆரம்பித்தது.

டிபன்ஸ் பலமிக்க மொராக்கோ, பிரான்ஸின் அதிரடி தாக்குதல் பாணியில் இருந்து மீள பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை. மாறாக, ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோலோ முவானி கோல் அடிக்க அந்த அணி 2 -0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இறுதியில் மொராக்கோ தோல்வியை தழுவ, நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

உலகக் கோப்பையின் கடைசி ஏழு பதிப்புகளில் (1998, 2006, 2018 மற்றும் 2022) பிரான்ஸ் நான்கு முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொள்ளவுள்ளது பிரான்ஸ். இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெல்லும்பட்சத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக்கோப்பை வென்ற அணி வரிசையில் இணைந்து சாதனை படைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in