Published : 20 Jul 2014 12:03 PM
Last Updated : 20 Jul 2014 12:03 PM

முரளி விஜய் அபாரம்; முன்னிலையை வலுப்படுத்துமா இந்தியா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான நேற்று இந்தியா தன் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்தைக் காட்டிலும் 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட முடிவில் முரளி விஜய் 59 ரன்களுடனும், கடுமையாக போராடி விளையாடிய தோனி 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

முரளி விஜய் கவனம் என்றால் என்ன என்பதன் குறியீடாகத் திகழ்ந்தார். இன்று மேலும் முன்னிலையை வலுப்படுத்தி உணவு இடைவேளை வரை ஒரு 90 ரன்களையும், அதன் பிறகு தேநீர் இடைவேளை வரை ஒரு 90 ரன்களையும் எடுத்தால் 325 ரன்கள் முன்னிலை கிடைக்கும், இங்கிலாந்தை களமிறக்கி வெற்றி பெற வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தோனி என்ன செய்வார் என்று தெரியவில்லை.

அல்லது மீதமுள்ள விக்கெட்டுகளை இங்கிலாந்து விறுவிறுவென வீழ்த்தி வெற்றி இலக்கை 225 அல்லது 240 ரன்களாகக் குறுக்கி 10 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு ஒரு வெற்றியை சாதிக்குமா இங்கிலாந்து என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

24 ரன்கள் முன்னிலையுடன் பந்து வீசிய இங்கிலாந்து துல்லியமாக வீசியது. முதல் இன்னிங்ஸில் 145/7 என்ற நிலையிலிருந்து ரஹானே ஒரு சிறந்த டெஸ்ட் சதத்தை எடுக்க இந்தியா 295 ரன்கள் எடுத்தது. அன்று ஆட்டத்தில் தன் பிடியை இழந்த இங்கிலாந்து நேற்று ஆட்டத்தை சற்றே தங்கள் பக்கம் திருப்பியது.

நடுவரும் உதவி புரிந்தார். அஜின்கியா ரஹானே அவுட் இல்லை. அவரது ஆர்ம் கார்டில் பட்டுச் சென்ற பந்திற்கு அவுட் கொடுக்கபட்டது.

தவான் 45 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து நன்றாகவே விளையாடினார். பென் ஸ்டோக்ஸ் வீசிய ஷாட் பிட்ச் பந்தை பாயிண்ட் திசையில் அடிக்க அங்கு ஜோ ரூட் பிரமாதமாக அதனைப் பிடித்தார்.

பிளன்கெட்டின் அபார ஓவர்:

அதன் பிறகு 118 வரை அபாரமாகக் கொண்டு சென்றனர் விஜய்யும், புஜாராவும். புஜாரா 83 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்திருந்தப் போது தேவையில்லாமல் பிளன்கெட் வீசிய வெளியே சென்ற பந்தை ஆட முயன்று பிரையரிடம் எட்ஜ் செய்து வெளியேறினார்.

அடுத்த பந்து இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விராட் கோலி இறங்கினார், லியாம் பிளென்கெட் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஒரு பந்தை பிட்ச் செய்தார். விராட் கோலி முதல் பந்தை ஆடவேண்டாம் என்று முடிவெடுக்க பந்து ஆஃப் கட்டராகி அதிர்ச்சியளிக்கும் கோலி பவுல்டு ஆனார்.

நடுவரின் மோசமான தீர்ப்பு:

அஜின்கியா ரஹானே களமிறங்கி ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்து விளையாடி வந்தார். ஸ்டூவர்ட் பிராட் பயங்கர பவுன்சர் ஒன்றை வீச அதனை ரஹானே எதிர்பார்க்கவில்லை, சரியாக அதனைத் தடுத்தாடவில்லை. பந்து எதிலோ பட்டு ஸ்கொயர் லெக் திசையில் கேட்ச் ஆனது. நடுவர் அவுட் என்றார். ஆனால் பந்து ரஹானேயின் ஆர்ம் கார்டில் பட்டுச் சென்றது ரீப்ளேயில் தெளிவாகத் தெரிந்தது.

ரன்கள் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு வீரருக்கு ஆக்சன்போர்ட் இவ்வாறு அவுட் கொடுத்திருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஆனால் 123/4 என்ற நிலையிலிருந்து விஜய், தோனி மேலும் சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.

விஜய் 59 ரன்களில் 7 பவுண்டரிகளை அடித்தார். அவர் 162 பந்துகளில் அரை சதம் கண்டார்.

முன்னதாக இங்கிலாந்து 219/6 என்று தொடங்கி மேலும் 100 ரன்கள் சேர்த்தது. பவுலர்கள் விக்கெட்டை வீழ்த்துவதில் திணறி வரும் இந்திய அணி நேற்று பிளென்கெட்டிற்கு அரைசதம் ஒன்றை விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆண்டர்சன் மீண்டும் வெறுப்பேற்றினார். புவனேஷ் குமாரின் மிகச்சிறந்த டெஸ்ட் பந்து வீச்சை சாதித்தார்.

பிட்ச் பேட்டிங்கிற்குச் சாதகமாக மாறிவிட்டது. இருந்தாலும் 300 ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில் துரத்துவது சுலபமல்ல. இன்று 4ஆம் நாள் ஆட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x