

வங்கதேச அணிக்கு எதிராக வரும் புதன் அன்று டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் ஆக்ரோஷ ஆட்டத்தை நிச்சயம் பார்ப்பீர்கள் என பத்திரிகையாளர் சந்திப்பில் கே.எல்.ராகுல் சொல்லி இருந்தார். அதனால் இப்போது அவரை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அண்மையில் முடிந்த ஒருநாள் தொடரை 1-2 என இந்தியா இழந்துள்ள நிலையில் இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்த சூழலில் ராகுல் இப்படி சொல்லி உள்ளார்.
“இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்த ஆக்ரோஷ அணுகுமுறை என்னை ஈரத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் இப்படி விளையாடப்படுவதை பார்க்கும் போது ஆர்வமாக உள்ளது. அச்சமின்றி, ஆக்ரோஷமாக ஆட்டத்தை சவாலாக எடுத்துக் கொண்டு அதில் முடிவையும் எட்டுகிறார்கள். அந்த முறை அவர்களுக்கு பலன் கொடுத்து வருகிறது.
ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதமாக விளையாடும். ஆனாலும் சிறப்பாக செயல்படும் அணிகளிடமிருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. இருந்தாலும் அது சூழலுக்கு ஏற்ற வகையில் மாறும்.
எனது தலைமையில் இந்திய அணி ஆக்ரோஷமான பாணியில் விளையாடும். அதை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்” என சொல்லியுள்ளார். இந்த தொடரின் முதல் போட்டியில் அவர் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துகிறார்.
அவரது இந்த கருத்தை ரசிகர்கள் இப்போது ட்ரோல் செய்து வருகின்றனர். ரசிகர்களின் ரியாக்ஷன்களில் சில இங்கே..
‘இந்த ஆண்டின் சிறந்த காமெடி இது’, ‘முதலில் டி20 கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக ஆடுங்கள்’ என சொல்லியுள்ளனர்.