

மும்பை: பரபரப்பான சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது இந்திய அணி.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் Beth Mooney மற்றும் மெக்ரத் என இருவரும் இணைந்து அபாரமாக பேட் செய்திருந்தனர். 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது.
ஸ்மிருதி மந்தனா, 49 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். ஷெஃபாலி, 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் 21 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஷ், 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். அவரது இன்னிங்ஸில் 3 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. அப்போது இரு அணியின் ஸ்கோரும் சமனாக இருந்தது.
அதனால் போட்டியில் முடிவை எட்ட சூப்பர் ஓவர் பலப்பரீட்சை நடந்தது. இந்திய மகளிர் அணி டி20 கிரிக்கெட் போட்டியில் எதிர்கொண்ட முதல் சூப்பர் ஓவர் இது. இந்திய அணிக்காக ரிச்சா கோஷ், ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் பேட் செய்தனர். 6, விக்கெட், 1, 4, 6, 3 ரன்கள் என மொத்தம் 20 ரன்களை அந்த ஓவரில் எடுத்தது இந்தியா.
சூப்பர் ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வென்ற என ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அந்த அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது இந்திய அணி. இந்த தொடரில் 3 போட்டிகள் எஞ்சியுள்ளன. ஆஸ்திரேலிய அணி டி20 கிரிக்கெட்டில் நடப்பு ஆண்டில் எதிர்கொண்டுள்ள முதல் தோல்வி இது.