

தோகா: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி, அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி, 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது. உலகக் கோப்பை வரலாற்றில் பிரேசில் அணி 1962-ம் ஆண்டு சாம்பியன் பட்ட அந்தஸ்துடன் களமிறங்கி கோப்பையை மீண்டும் வென்றது. இந்த சாதனையை இதுவரை எந்த அணியும் தகர்க்கவில்லை. இம்முறை கத்தாரில் இந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியாக பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் களத்தில் ஆக்ரோஷம் காட்டியது.
அதற்கேற்ப அந்த அணியின் வீரர் Aurélien Tchouaméni ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெறவைத்தார். தொடர்ந்து பிரான்ஸ்க்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்தின் ஹாரி கேன், லுக் ஷா போன்றோர்கள் முயன்றனர். ஹாரி கேனின் முயற்சி ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் கைகொடுக்க இரு அணிகளும் 1 - 1 என்ற கணக்கில் சமநிலை வகித்தன. ஆனால், பிரான்ஸ் வீரர் ஆலிவர் ஜிரோட் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்து மீண்டும் ஆட்டத்தை தங்கள் அணி பக்கம் திருப்பினார். அவரின் அற்புதமான ஆட்டத்தால் பிரான்ஸ் அணி 2- 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி மீண்டும் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெற்றது.