

புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் தலைவர் பதவிக்கு பி.டி.உஷாவை தவிர மற்ற யாரும் போட்டியிடவில்லை. இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
58 வயதான பி.டி. உஷா கடந்த 1984-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டிருந்தார். எனினும் ஆசிய விளையாட்டில் 4 தங்கம் உட்பட 11 பதக்கங்களை வென்று குவித்தார். இந்திய மற்றும் ஆசிய அளவில் தடகளத்தில் 20 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய பி.டி. உஷா இறுதியாக 2000-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 95 ஆண்டு கால வரலாற்றில் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற, ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒருவரை தலைவராக தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறை. ‘பயோலி எக்ஸ்பிரஸ்’ என அன்புடன் அழைக்கப்படும் பி.டி.உஷா கடந்த ஜூலை மாதம் பாஜகவினால் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
1934-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய மகாராஜா யாதவிந்திரா சிங்கிற்குப் பிறகு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் விளையாட்டு வீராங்கனை உஷா ஆவார். யாதவிந்திரா சிங் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் 1938 முதல் 1960 வரை தலைவர் பதவியில் இருந்தார்.
இந்திய ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர்களாக ககன் நரங், ராஜ்லட்சுமி சிங் தியோ ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.