

லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தியது. இது மறக்க முடியாத வெற்றியாகும் என்று இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
ஆட்டம் முடிந்து பரிசளிப்பு விழாவில் மைக்கேல் ஆர்தர்ட்டன் கேள்விகளுக்குப் பதில் அளித்த தோனி கூறியதாவது:
”மறக்க முடியாத வெற்றி. இந்த அணியில் இங்கிலாந்து மைதானங்களில் விளையாடிய அனுபவம் சில வீரர்களுக்கு இல்லை. ஆனாலும் இவர்களது அணுகுமுறை அபாரமாக இருந்தது.
டாஸ் முக்கியமானது. வேகப்பந்து வீச்சாளர்கள் வீச அருமையான பிட்ச். பேட்டிங் மொத்தமும் அருமையாக அமைந்தது. இங்கிலாந்து பவுலர்கள் இந்திய பேட்ஸ்மென்களுக்குப் பந்து வீசவில்லை. அவர்களை பந்துவீச வைத்தனர் இந்திய பேட்ஸ்மென்கள்.
2011ஆம் அண்டு தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் என்றே கருதுகிறேன். 3ஆம் நாள் வரையிலும் ஆட்டத்தில் ஒரு அணி இருக்க வேண்டும். அப்போதுதான் பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். 2011ஆம் ஆண்டு தொடரில் அவ்வாறு அமையவில்லை.
ஜடேஜா அதுபோன்ற ஆட்டத்தை விளையாட வேண்டியத் தேவை இருந்தது. அவர் அதிகம் டெஸ்ட் போட்டிகளை விளையாட விளையாட முறையான டெஸ்ட் பேட்ஸ்மெனாக அவர் மாறிவிடுவார். அவரது உத்தி நன்றாகவே உள்ளது. ஆனால் அவருக்கு எப்போதும் தன் மீதே சந்தேகம்.
இன்று ஆட்டம் தொடங்கியபோது முதல் 2 மணி நேரம் சிறப்பாகச் செயல்படவேண்டும் என்பதை உணர்த்தியது. ஆனால் அந்தத் தருணத்தில் நம் மேலேயே நமக்கு சந்தேகம் வந்து விடும். உணவு இடைவேளைக்கு முதல் ஓவரை வீச இஷாந்த் சர்மாவை அழைத்தேன், ஆனால் அவர் ஷாட் பிட்ச் பந்துகளை வீச விரும்பவில்லை.
ஆனால் நான் அவரிடம் கூறினேன், உயரமாக இருக்கும் அவரால்தான் பவுன்சர்களை நன்றாக வீச முடியும் என்றேன், ஆகவே வீசித்தான் ஆகவேண்டும் என்றேன். அதன் பிறகு அவர் தனது அபாரத் திறமையைக் காண்பித்தார்.
இவ்வாறு கூறினார் தோனி.