Published : 09 Dec 2022 09:21 AM
Last Updated : 09 Dec 2022 09:21 AM

FIFA WC 2022 | அற்புதங்கள் நிகழ்த்துவாரா லயோனல் மெஸ்ஸி? - நெதர்லாந்துடன் இன்று பலப்பரீட்சை

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜெண்டினா – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மோதல் எப்போதுமே சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் இருந்துள்ளது. அர்ஜெண்டினா இரு முறை சாம்பியன் என்ற அந்தஸ்துடனும், நெதர்லாந்து 3 முறை 2-ம் இடம் பிடித்த அணி என்ற பெயருடனும் களமிறங்குகின்றன. இன்றைய ஆட்டமானது எல்லா காலத்திலும் சிறந்து விளங்கும் அர்ஜெண்டினாவின் முன்கள வீரரான லயோனல் மெஸ்ஸிக்கும், நவீன கால்பந்து உலகின் சிறந்த டிபன்டரான நெதர்லாந்தின் விர்ஜில் வான் டிஜ்-க்கும் இடையிலான மோதலாக பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் இந்த ஆட்டமானது கத்தார் உலகக் கோப்பையில் இளம் பயிற்சியாளருக்கும், அதிக வயதான பயிற்சியாளருக்கும் இடையிலான மோதலாகவும் அமைந்துள்ளது. அர்ஜெண்டினாவின் 44 வயதான பயிற்சியாளர் லயோனல் ஸ்காலோனிக்கு இது பெரிய அளவிலான முதல் போட்டியாகும். இதனால் அவர், தந்திரமான 71 வயதான நெதர்லாந்தின் பயிற்சியாளர் லூயிஸ் வான் ஹாலை விட மேம்பட்ட வகையில் சிந்திக்க வேண்டும்.

கத்தார் உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணி லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில்முதலிடம் பிடித்தது. கால் இறுதிக்குமுந்தைய சுற்றில் அமெரிக்காவை பந்தாடியிருந்தது. நெதர்லாந்து அணி மந்தமாக செயல்படுகிறது என விமர்சகர்கள் முத்திரை குத்திய போதிலும் தாக்குதல் ஆட்டத்தில் அதிக செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியதாகவேநெதர்லாந்து திகழ்கிறது. முன்கள வீரரான மெம்பிஸ் டிபே, விங்கரான காக்போ ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதில் காக்போ 3 கோல்கள் அடித்து சிறந்த பார்மில் உள்ளார்.

அர்ஜெண்டினா அணி, கத்தார் உலகக் கோப்பையை அதிர்ச்சி தோல்வியுடன் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் வீழ்ந்த போதிலும் அதன் பின்னர் மீண்டெழுந்து அடுத்தடுத்து இரு வெற்றிகளை குவித்து லீக் சுற்றில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்தது. கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் லயோனல்மெஸ்ஸியின் மேஜிக்கால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினாஅணி. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி, பந்துடன் அதிக தொடர்பில் உள்ளார். படைப்பாற்றலுடன் செயல்பட்டு பல்வேறு கோல் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார். இது எதிரணிகளை உற்று நோக்க வைத்துள்ளது.

நெதர்லாந்து பயிற்சியாளர் வான் ஹால் கூறும்போது, “ மெஸ்ஸி மிகவும் ஆபத்தான படைப்பாற்றல் வீரர், கோல் அடிக்கவும், கோல் அடிப்பதற்கான நிறைய வாய்ப்புகளை உருவாக்கவும் அவரால் முடியும். ஆனால் அர்ஜெண்டினா அணி தங்கள் வசத்தில் உள்ள பந்தை இழக்கும் போது மெஸ்ஸியின் பங்களிப்பு அதிகம் இல்லாமல் உள்ளது. இதுவே எங்களுக்கான வாய்ப்புகளை கொடுக்கும்” என்றார்.

ஆச்சரியம் என்னவென்றால் உலகக் கோப்பை மற்றும் நட்பு ரீதியிலான சர்வதேச போட்டிகளில் நெதர்லாந்துக்கு எதிராக 9 முறை மோதி உள்ள போதிலும் அர்ஜெண்டினா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களுக்குள் வெற்றி கண்டது இல்லை.

2014-ம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் நெதர்லாந்தை தோற்கடித்தது. அப்போது நெதர்லாந்து அணியின் பயிற்சியாளராக வான் கால் இருந்தார். இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க வான் கால், திட்டங்கள் வகுக்கக்கூடும்.

உலகக் கோப்பையை ஒருபோதும் வெல்லாத சிறந்த அணிகளில் ஒன்றாக நெதர்லாந்து கருதப்படுகிறது, அந்த அணி தொடர்ச்சியாக 1974 மற்றும் 1978-ம் ஆண்டு உலகக் கோப்பைகளில் 2-வது இடத்தைப் பிடித்தது. இதில் 1978-ல் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்றது நெதர்லாந்து அணி.

சிறந்த தொழில்நுட்ப திறன்கள் மற்றும் புத்திசாலித்தனமான தந்திரோபாயங்கள் நெதர்லாந்து அணியின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. ஆனால் உலகக் கோப்பை பட்டம் வெல்லாதது அவற்றை நீர்த்துப் போகச் செய்கிறது. 1988-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றது மட்டுமே நெதர்லாந்து அணிக்கு இன்னும் ஆறுதலாக உள்ளது.

தங்கள் கால்பந்து வரலாற்றையும், நெதர்லாந்துடனான அவர்களின் போராட்டங்களையும் அறிந்த அர்ஜெண்டினா, கத்தார் உலகக் கோப்பையில் அதிக சிக்கலை சந்திக்காத நெதர்லாந்து அணியின் திறனை நன்கு சோதிக்கும் என்று எதிர்பார்க்கிறது.

6-வது முறையாக…: உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா – நெதர்லாந்து 6-வது முறையாக மோதுகின்றன. 1974-ம் ஆண்டு தொடரில்நெதர்லாந்து 4-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியிருந்தது. அடுத்த உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா கூடுதல் நேரத்தில் 3-1 என பதிலடி கொடுத்தது. 1998-ம் ஆண்டு உலகக் கோப்பையில் நெதர்லாந்து 2-1 என வெற்றி கண்டது. 2006 உலகக் கோப்பையில் இரு அணிகள் மோதிய ஆட்டம் கோல்களின்றி டிரா ஆனது. 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜெண்டினா வெற்றி கண்டது.

வெற்றி வேட்டை...: கடந்த ஆண்டு ஐரோப்பிய சாம்பிபியன்ஷிப்பில் கால் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறிய நெதர்லாந்து அதன் பின்னர் தொடர்ச்சியாக 19 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் உள்ளது.

பெனால்டி ஷூட் அவுட் பயம்..: 1998-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரேசிலிடமும், 2014-ல் அர்ஜென்டினாவிடமும் பெனால்டி ஷூட் அவுட்டில் நெதர்லாந்து அணி தோல்வி கண்டது. அதேவேளையில் 2014-ல் கோஸ்டாரிகாவுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x