Published : 27 Jul 2014 12:00 AM
Last Updated : 27 Jul 2014 12:00 AM

தமிழகத்துக்கான ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்துக்கான ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்துக்காக தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டிக்கு 13,159 பேர் விண்ணப்பித்துள்ளனர். முஸ்லிம் மக்கள்தொகை அடிப்படையில் இந்திய ஹஜ் கமிட்டி, தமிழக ஹஜ் கமிட்டிக்கு 2,672 இடங்களை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதில் ஹஜ் வழிமுறைகளின்படி 1,180 இடங்கள் சிறப்புப் பிரிவு பயணிகளுக்கும் 1,492 இடங்கள் பொதுப் பயணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய ஹஜ் கமிட்டி கூடுதலாக வெறும் 100 இடங்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதனால், ஏராளமான விண்ணப்பதாரர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாவார்கள்.

முந்தைய ஆண்டுகளில் இந்திய ஹஜ் கமிட்டி, கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ததன் காரணமாக தமிழகத்தில் அதிகப்படியான பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடிந்தது என்பதை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 3,696 பேர் ஹஜ் பயணம் சென்றனர்.

இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்துள்ள பயணிகள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எப்படியும் தங்களுக்கு உறுதியாக இடம் கிடைக்கும் என்று அவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, தமிழகத்துக்கான ஹஜ் பயண ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து கூடுதல் பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்ள வசதியாக அதிக இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு அறிவுரை வழங்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x