Published : 08 Dec 2022 06:37 AM
Last Updated : 08 Dec 2022 06:37 AM

FIFA WC 2022 | கிறிஸ்டியானோ ரொனால்டோவை நீக்கியது ஏன்?

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கடைசி அணியாக கால் இறுதிக்குள் நுழைந்தது போர்ச்சுகல். கோன்காலோ ரமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு தோகாவின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டத்தில் போர்ச்சுகல் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. போர்ச்சுகல் அணியில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக கோன்காலோ ரமோஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

17-வது நிமிடத்திலேயே தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு சரியானதுதான் என நிரூபித்தார் 21 வயதான ரமோஸ். ரஃபேல் குரேரோ த்ரோ செய்த பந்தை ஜோவோ பெலிக்ஸ் கட் செய்து கோன்காலோ ரமோஸுக்கு அனுப்பினார். அருகில் சுவிட்சர்லாந்து டிபன்டர் ஃபேபியன் ஷேர் இருந்த போதிலும் அவரை கடந்து கோல் கீப்பர் யான் சோமர் திகைத்து போகும் அளவுக்கு பந்தை கோல் வலைக்குள் திணித்தார் கோன்காலோ ரமோஸ்.

இதனால் போர்ச்சுகல் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 33-வது நிமிடத்தில் போர்ச்சுகல் 2-வது கோலை அடித்தது. கார்னரில் இருந்து புரூனோ பெர்னாண்டஸ் உதைத்த பந்தை இலக்குக்கு மிக நெருக்கமான வகையில் தலையால் முட்டி கோல் அடித்தார் பெப்பே. இதனால் போர்ச்சுல் அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை வகித்தது. 2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் கான்கோலோ ரமோஸ் மீண்டும் ஒரு கோலை அடித்தார்.

இலக்குக்கு 6 அடி தூரத்தில் இருந்தபடி டியோகோ டலோத்தின் கிராஸை பெற்ற கான்கோலா ரமோஸ் அற்புதமாக கோல் அடித்தார்.அடுத்த 4-வது நிமிடத்தில் ரமோஸின் உதவியுடன்பந்தை பெற்று ரஃபேல் குரேரோகோல் அடிக்க சுவிட்சர்லாந்து அணி அதிர்ச்சியில் உறைந்தது. எனினும் அந்த அணி கோல் அடிக்க போராடியது. 58-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து உதைக்கப்பட்ட பந்தை சுவிட்சர்லாந்து வீரர் அகன்ஜி கோலாக மாற்றினார்.

67-வது நிமிடத்தில் கான்கோலா ரமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். ஜோவோ பெலிக்ஸ் உதவியுடன் இந்த கோலை அவர், அடித்தார். இதனால் போர்ச்சுகல் 5-1 என்ற வலுவானமுன்னிலையை நோக்கி நகர்ந்தது. போட்டி முழுவதும் போர்ச்சுகல் அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் 73-வது நிமிடத்தில் ஜோவோ பெலிக்ஸுக்கு பதிலி வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோகளமிறக்கப்பட்டார். 83-வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த கோல் ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டது.

காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 2-வது நிமிடத்தில் ரஃபேல் லியோ கோல் அடிக்க போர்ச்சுகல் 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுகால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. வரும் 10-ம்தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியானது மொராக்கோவுடன் மோதுகிறது.

மொராக்கோ கால் இறுதிக்கு முந்தைய சுற்றில்ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களிலும், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட 30 நிமிடங்கள் கூடுதல்நேரத்திலும் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. பெனால்டி ஷூட் அவுட்டில் மொராக்கோ அணியின் கோல் கீப்பர் யாசின் பவுனவின் தடுப்பு அரணை மீறி ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது.

துணிச்சலான முடிவு.. : 21 வயதான கோன்காலோ ரமோஸ் சுவிட்சர்லாந்து போட்டிக்கு முன்னதாக வெறும் 3 ஆட்டங்களில் 33 நிமிடங்கள் மட்டுமே போர்ச்சுகல் அணிக்காக விளையாடி இருந்தார். அப்படி இருக்கும் போது அவருக்காக 5 உலகக் கோப்பைகளில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் தேசிய அணிக்காக 118 கோல் விளாசியவருமான ரொனால்டோவை வெளியே அமர வைத்தது என்பது பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் எடுத்ததுணிச்சலான முடிவாகவே பார்க்கப்படுகிறது. எனினும் தன் மீது வைத்த நம்பிக்கையை ரமோஸ் நீர்த்துப்போக செய்யவில்லை. விளையாடிய முதல் நாக் அவுட் ஆட்டத்திலேயே ஹாட்ரிக் கோல் அடித்து புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார்.

5 -வது முறையாக உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட கோன்காலோ ரமோஸ் தான் பங்கேற்ற முதல் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் 17-வது நிமிடத்திலேயே கோல் அடித்து அனைவரையும் ஈர்த்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவை நீக்கியது ஏன்?: கிறிஸ்டியானோ ரெனால்டோ லீக் சுற்றில் தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 65-வது நிமிடத்தில் வெளியே எடுக்கப்பட்டார். இதனால் அவர், அதிருப்தியுடன் வெளியே வந்தார். இந்நிலையில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக ரொனால்டோ தொடக்க வரிசையில் சேர்க்கப்படவில்லை. 73-வது நிமிடத்தில் பதிலி வீரராகவே அவர், களமிறக்கப்பட்டார். இது குறித்து போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கூறும்போது, “தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நிகழ்ந்தது முடிந்து போன விஷயம். ரொனால்டோ உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அணியைப் பற்றியும் நாம் கூட்டாகச் சிந்திக்க வேண்டும். ரொனால்டோவும் நானும் பயிற்சியாளர் மற்றும் வீரருக்கு உண்டான தொடர்புகளுடன் தனிப்பட்ட அம்சத்தை ஒருபோதும் குழப்புவதில்லை” என்றார்.

முதல் கோல் மழை: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல் அணி கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக இரு கோல்கள் அடித்திருந்தது. இதன் பின்னர் தற்போதுதான் நாக் அவுட் சுற்றில் அதிக கோல்கள் அடித்துள்ளது.

கோல் பட்டியலில் பாப்பே ஆதிக்கம்: கத்தார் உலகக் கோப்பை தொடரானது கால் இறுதி சுற்றை எட்டியுள்ளது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றுவரை அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் பிரான்ஸின் கிளியன் பாப்பே 5 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

என்னர் வலென்சியா (ஈக்வேடார்), கோடி காக்போ (நெதர்லாந்து), மார்கஸ் ராஷ்ஃபோர்ட் (இங்கிலாந்து), அல்வரோ மொராட்டா (ஸ்பெயின்), லயோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), ஆலிவர் கிரவுடு (பிரான்ஸ்), புகாயோ சகா (இங்கிலாந்து), ரிச்சர்லிசன் (பிரேசில்), கோன்காலோ ரமோஸ் (போர்ச்சுகல்) ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்துள்ளனர்.

அதிக வயதில் கோல்…: சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் 2-வது கோலை பெப்பே அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ரோஜர் மில்லாவுக்கு (42 வருடங்கள் 39 நாட்கள்) பின்னர் அதிக வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் பெப்பே (39 வருடங்கள் 283 நாட்கள்). ரோஜர் மில்லா 1994-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ரஷ்யாவுக்கு எதிராக கோல் அடித்திருந்தார்.

பீலேவுக்கு பிறகு…: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் பிரேசிலின் பீலேவுக்கு பிறகு இளம் வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை போர்ச்சுகலின் 21 வயது வீரர் கோன்காலோ ரமோஸ் பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x