கொச்சியில் இறுதிப்போட்டி: முதலிடத்துக்கு மல்லுக்கட்டும் மும்பை, டெல்லி அணிகள்

கொச்சியில் இறுதிப்போட்டி: முதலிடத்துக்கு மல்லுக்கட்டும் மும்பை, டெல்லி அணிகள்
Updated on
1 min read

ஐஎஸ்எல் 3-வது சீசனில் லீக் ஆட்டங்களின் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெறுகிறது.

இதில் ஏற்கெனவே அரை இறுதிக்குள் நுழைந்துள்ள மும்பை சிட்டி எப்சி - டெல்லி டைனமோஸ் எப் சி அணிகள் மோதுகின்றன. இந்த அணிகள் முதல் சுற்றில் டெல்லியில் மோதிய போது 3-3 என ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. பல திருப்பங்கள் நிறைந்த அப்போட்டியில் கோல்கள் சரமாரியாக அடிக்கப்பட்டன.

முதலிடத்துக்காக மோதும் இன்றைய ஆட்டத்திலும் கோல்களுக்குப் பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது. இதுகுறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் அலெக்சாண்டர் கிமாரஸ் கூறும்போது, “முதல் சுற்றில் நாங்கள் மோதியதை போன்றுதான் இந்த ஆட்டமும் இருக்கும். எந்த நிர்பந்தமுமின்றி ஆடும்போது கோல்கள் எப்படி அதிகமா அடிக்கப்படும் என்பதை கோவா-சென்னை அணிகள் நேற்றுமுன்தினம் மோதிய ஆட்டத்தில் பார்த்திருப்பீர்கள்.

எங்களால் எந்த நெருக்கடியும் இன்றி விளையாட முடியும். ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து ஆதரவு அளிக்க வேண்டும். மும்பை அணி நிச்சயம் சிறப்பாக விளையாடி வெற்றியை வசப்படுத்தும்’’ என்றார்.

மும்பை 22 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி 20 புள்ளிகளை பெற்றுள் ளது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றால் அந்த அணி முதலிடத்தை பிடிக்கும். அதே வேளையில் ஆட்டத்தை டிராவில் முடித்தால் மும்பை தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ளும்.

கொச்சியில் இறுதிப் போட்டி

8 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐஎஸ்எல் தொடர் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளது. மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய 3 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் கடைசி அணியாக அரை இறுதிக்குள் நுழைவதில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட், கேரளா அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இந்த தொடரின் இறுதி ஆட்டம் கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in