

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அவசியம் வேண்டும் என கன்னட நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இவர் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களின் நலன் சார்ந்து தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த பயணத்தின் ஒருநாள் தொடரில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய அணி வீரர்கள் தடுமாறி வருகின்றனர். இந்தச் சூழலில் அவர் இந்தக் கருத்தை அண்மையில் தெரிவித்துள்ளார்.
“தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் கிட்டத்தட்ட 70 சதவீத வீரர்கள் உயர் சாதியை சேர்ந்தவர்கள். கிரிக்கெட் விளையாட்டில் இடஒதுக்கீடு கொண்டு வருவதன் மூலம் அணியின் செயல்திறன் மேம்படும். பட்டியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு அணியில் இடஒதுக்கீடு வேண்டும்.
இந்த விஷயத்தில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அங்கு வெள்ளையர்கள் அல்லாத வீரர்கள் தேசிய அணியில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் எந்த அளவுக்கு பணப்புழக்கம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று” என அவர் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்து நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.