

டாகா: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 271 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் மெஹதி ஹசன் மற்றும் மஹ்முதுல்லா 148 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர். மறுபக்கம் ஃபீல்டிங் செய்தபோது இடது கை பெருவிரலில் காயம் அடைந்த காரணத்தால் களத்தில் இருந்து இந்திய கேப்டன் ரோகித் வெளியேறினார்.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தப் பயணத்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இரு அணிகளும் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த சூழலில் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பிறகு 7-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த மெஹதி ஹசன் மற்றும் மஹ்முதுல்லா 148 ரன்களை குவித்தனர். இருவரும் நேர்த்தியாக பேட் செய்தனர். மெஹதி ஹசன் 100 ரன்களும், மஹ்முதுல்லா 77 ரன்களும் எடுத்திருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்களை எடுத்தது.
கடைசி பந்தில் சதம்: 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேச அணி. அப்போது களத்திற்கு வந்தார் மெஹதி ஹசன். இறுதி வரை அவுட்டாகாமல் பேட் செய்த அவர் இன்னிங்ஸின் கடைசி பந்தில் சதம் விளாசி அசத்தினார். 83 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது முதல் சதம் ஆகும். இதில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதில், இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றி அசத்தினார். உம்ரான் மாலிக் மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பை உயிர்ப்போடு வைக்க முடியும். இன்றைய போட்டியில் இந்தியா தோல்வியை தழுவும் பட்சத்தில் தொடரை வங்கதேசம் வெல்லும். தற்போது இந்தியா 272 ரன்களை விரட்டி வருகிறது.
காயம் அடைந்து களத்தில் இருந்து வெளியேறிய கேப்டன் ரோகித் சர்மா, எக்ஸ்-ரே பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் மைதானம் வந்தார். அவர் கையில் கட்டு போடப்பட்டு இருந்தது தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.