Published : 07 Dec 2022 07:32 AM
Last Updated : 07 Dec 2022 07:32 AM

FIFA WC 2022 | ‘இரவு முழுவதும் அழுதேன்’ - பிரேசில் வீரர் நெய்மர் உருக்கம்

தென் கொரியாவின் தடுப்பு அரண்களை மீறி கோல் அடிக்கிறார் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர். உள்படம்: வினிசியஸ் ஜூனியர்.படங்கள்: ஏஎப்பி

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ச்சியாக 8-வது முறையாக கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது பிரேசில் அணி. வரும் 9-ம் தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில், குரோஷியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தோகாவில் உள்ள ஸ்டேடியம் 974-ல் நேற்று நள்ளிரவு நடைபெற்ற கால் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றில் 5 முறை சாம்பியனான பிரேசில், தென் கொரியாவுடன் மோதியது. காயம் காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் விளையாடாத நட்சத்திர வீரர் நெய்மர் களமிறங்கியதால் பிரேசில் அணி மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டது. 7-வது நிமிடத்திலேயே பிரேசில் முதல் கோலை அடித்தது.

வலது விங்கில் பிரேசிலின் ரஃபின்ஹா கொரிய வீரர் ஹவாங்பியோமுக்கு போக்கு காட்டி பந்தை பாக்ஸூக்குள் கொண்டு வந்தார்.பின்னர் நெய்மருக்கு தட்டிவிட்டார். ஆனால் அவர், மைதானத்தில் சறுக்கி விழுந்ததால் பந்தை தொட முடியாமல் போனது. அதேவேளையில் பந்து இடது புறம் நின்று கொண்டிருந்த வினிசியஸ் ஜூனியர் வசம் சென்றது. யாரும் மார்க் செய்யப்படாமல் இருந்த அவர், நின்று நிதானமாக பந்தை தடுத்து நிறுத்தி கோல் வலைக்குள் திணித்தார். இதனால் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

11-வது நிமிடத்தில் பெனால்டி பகுதியில் வைத்து பிரேசில் வீரர் ரிச்சர்லிசனை ஃபவுல் செய்தார் தென் கொரிய வீரர் ஜங் வூ-யங்.இதனால் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை நெய்மர் கோலாக மாற்ற பிரேசில் 2-0 என முன்னிலை பெற்றது. 29-வது நிமிடத்தில் ரிச்சர்லிசன் பயிற்சியில் ஈடுபடுவது போன்று தலையால் பந்தை அற்புதமாக ட்ரிப்ளிங் செய்து, தென் கொரிய டிபன்டரிடம் பிடிகொடுக்காமல் பந்தை காலுக்கு கொண்டு வந்து சக வீரரான மார்க்கின்ஹோஸுக்கு தட்டிவிட்டு பாக்ஸ் பகுதிக்குள் விரைந்தார்.

மார்க்கின் ஹோஸ் பந்தை கேப்டன் தியாகோ சில்வாவுக்கு பாஸ் செய்தார். அவர் ரிச்சர்லிசனுக்கு அனுப்ப, அவர் கச்சிதமாக கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 3-0 என முன்னிலை வகித்தது.

அடுத்த 7-வது நிமிடத்தில் 4-வது கோலை அடித்து தென் கொரியாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது பிரேசில் அணி. 36-வது நிமிடத்தில் ரிச்சர்லிசன் பந்தை விரைவாக கடத்திச் சென்று நெய்மருக்கு தட்டிவிட்டார். நெய்மர் இடதுபுறத்தில் வினிசியஸ் ஜூனியருக்கு அனுப்ப அவர், பாக்ஸின் மையப் பகுதிக்குள் பந்தை கட் செய்து அனுப்பினார்.

அங்கு தயாராக இருந்த லூகாஸ் பகுயிடா இலக்கை நோக்கி துல்லியமாக உதைக்க முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. 76-வது நிமிடத்தில் தென் கொரியா வீரர் சியுங்-ஹோ, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து வியக்க வைக்கும் வகையில் கோல் அடித்து அசத்தினார். ஆனால் மேற்கொண்டு அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

குரோஷியாவுடன் மோதல்…

உலகக் கோப்பை கால்பந்துதொடரில் பிரேசில் அணி தொடர்ச்சியாக 8-வது முறையாக கால் இறுதி சுற்றில் கால்பதித்துள்ளது. வரும் 9-ம் தேதி எஜுகேசன் சிட்டி மைதானத்தில் நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியானது குரோஷியாவை எதிர்கொள்கிறது. குரோஷியா கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானை தோற்கடித்தது. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் குரோஷிய அணியின் கோல் கீப்பர் டொமினிக் லிவகோவிச் அற்புதமாக செயல்பட்டார். இதனால் குரோஷியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நெய்மரின் 76-வது கோல்: தென் கொரியாவுக்கு எதிராக பெனால்டி வாய்ப்பில் பிரேசில் நட்சத்திரம் நெய்மர் கோல் அடித்தார். சர்வதேச அரங்கில் இது அவரது76-வது கோலாக அமைந்தது. பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜாம்பவான் பீலேவின் (77 கோல்கள்) சாதனையை சமன் செய்ய நெய்மருக்கு இன்னும் ஒரு கோல் மட்டுமே தேவை.

‘இரவு முழுவதும் அழுதேன்’: தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டம் முடிவடைந்ததும் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கூறும்போது, “நாங்கள் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று கனவு காண்கிறோம், அது வெளிப்படையானது. அதை நோக்கி நாங்கள் படிப்படியாக செல்ல வேண்டும். லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் காயமடைந்தபோது அன்றைய தினம் இரவுப் பொழுதை மிகவும் கடினமாக கழித்தேன். ஒரு மில்லியன் வித்தியாசமான விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். மீண்டும் விளையாடுவோமா? என ஒரு கட்டத்தில் பயப்பட தொடங்கினேன். இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன். இதன் பின்னர் தொடர்ச்சியாக பிசியோதெரபி எடுத்துக்கொண்டது பலன் அளித்தது” என்றார்.

1998-க்கு பிறகு 4 கோல்…: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் பிரேசில் அணி 1998-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் 4 கோல்கள் அடித்துள்ளது.

கூடுதல் நேரமும், குரோஷியாவும்..: பெரிய போட்டிகளில் குரோஷியாவின் கடந்த எட்டு நாக் அவுட் ஆட்டங்களில் ஏழு கூடுதல் நேரத்திற்குச் சென்றுள்ளன, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் பிரான்ஸிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது மட்டுமே விதிவிலக்கு.

மருத்துவமனையில் போட்டியை கண்டுகளித்த பீலே: 82 வயதான பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, பெருங்குடல் புற்றுநோய்க்காக சாவோ பாலோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே கத்தார் உலகக் கோப்பையில் பிரேசில் – தென் கொரியா அணிகள் மோதிய ஆட்டத்தை தொலைக்காட்சியில் கண்டுகளித்தார் பீலே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x