Published : 16 Jul 2014 12:01 PM
Last Updated : 16 Jul 2014 12:01 PM

ஜடேஜாவை தள்ளிவிட்ட சம்பவம்: ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாட 2 போட்டிகளுக்குத் தடை?

டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற இங்கிலாந்து - இந்தியா மோதிய முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை வசைபாடிய பிறகு தொட்டுத் தள்ளி விட்டதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் மீது இந்திய அணி நிர்வாகம் புகார் செய்துள்ளது.

இந்திய கேப்டன் தோனி மற்றும் வீரர்களிடம் உறுதி செய்துகொண்ட பிறகு, ஐசிசி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் இந்திய அணி மேலாளர் சுனில் தேவ் புகார் அளித்தார்.

இதனால் ஐசிசி ஒழுங்கு விதிகள் லெவல் 3-ஐ அவர் மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 டெஸ்ட் போட்டிகள் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இது பற்றி சுனில் தேவ் கூறுகையில், "நான், கேப்டன் தோனி மற்றும் வீரர்களிடம் இந்த விவகாரத்தை உறுதி செய்து கொண்ட பிறகே புகார் அளித்தேன். அனைவருமே ஜேம்ஸ் ஆண்டர்சன், ரவீந்திர ஜடேஜாவை தொட்டுத் தள்ளியதாகக் கூறினர். இது சீரியஸ் விவகாரம், ஒரு வீரரைத் தொட்டுத் தள்ளுவதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது" என்றார்.

இந்தச் சம்பவத்தை 'சிறு விவகாரம்' என்று கூறிவந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் புகார் அளித்ததையடுத்து கோபமடைந்துள்ளதாக இங்கிலாந்து பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜடேஜாவுக்கு எதிராக புகார் கொடுப்போம் என்பதையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்தியாளர்களுக்கான குறிப்பில் தெரிவித்துள்ளது. ஜேம்ஸ் ஆண்டர்சன் தன் மீதான இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

2ஆம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின்போது இந்த மோதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது உணவு இடைவேளைக்கு இரு அணிகளும் செல்லும்போது ஜடேஜாவும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபடியே பெவிலியன் சென்றுள்ளனர். அதன் பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரைத் திட்டி, தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஓய்வறைக்குச் செல்லும் வழியில்கூட இருவரும் வாக்குவாதம் செய்தபடியே சென்றதாகவும் ஒரு நேரத்தில் ஜடேஜா, ஆண்டர்சன் பக்கம் ஆக்ரோஷமாகத் திரும்ப ஆண்டர்சன் அவரைத் தள்ளிவிட்டதாகவும் டெலிகிராப் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் சீனியர் பவுலரை, சிறந்த பவுலரை தொடரை விட்டு வெளியேற்ற இந்தியா திட்டமிட்டு சதி செய்கிறது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், முன்னாள் விரர்கள், தற்போதைய இங்கிலாந்து வீரர்கள் ஆகியோர் கருதுவதாக இங்கிலாந்து செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டர்சன் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் விதிமுறைகளின்படி அவருக்கு 2 டெஸ்ட் போட்டிகள் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் வரை தடை விதிக்கமுடியும்.

ஜடேஜாவுக்கு எதிராகப் புகார் கொடுக்க பரிசீலித்து வரும் இங்கிலாந்து மற்றொரு புறத்தில் இந்தப் பொறியில் சிக்க வேண்டுமா என்று யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இருவருமே தவறு செய்ததாக நிரூபணமானால், இந்தியாவுக்குப் போனால் ஜடேஜாதான், ஆனால் இங்கிலாந்துக்கு ஜேம்ஸ் ஆண்டர்சனாயிற்றே? என்று இங்கிலாந்து யோசித்து வருவதாக இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x