Published : 27 Jul 2014 11:58 AM
Last Updated : 27 Jul 2014 11:58 AM

விற்காத வேட்டிதான் எனது மூலதனம்: ராம் ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் நேர்காணல்

கலாச்சார மாற்றத்தில் காணாமல் போய்விடுமோ என்றிருந்த வேட்டியை மீட்டெடுப்பதில் இவரது பங்களிப்பு அதிகம். தந்தை ராமசாமியின் பெயரில் உள்ள முதல் பகுதியில் தனது பெயரின் பின் பகுதி வார்த்தைகளை இணைத்து 'ராம் ராஜ்' காட்டன் என்று நிறுவனத்துக்குப் பெயர் சூட்டிய இவர் நாகராஜ்.

30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டுக்கு இவர் தயாரித்தது 20,000 வேட்டிகள். இன்று தினசரி 1.5 லட்சம் வேட்டிகள் விற்பனை ஆகின்றன. சர்வதேச விமான நிலையங்களிலும் இவரது வேட்டி ஷோரூம்கள் கடை விரிக்கப்பட்டு வெளிநாட்டவர்களும் இவரது கம்பெனி வேட்டியை வாங்கிச் செல்கின்றனர். ஆன்லைன் விற்பனையிலும் சக்கைபோடு போடுகின்றன.

வேட்டியை முன்வைத்து தமிழ் பண்பாடு கலாச்சார சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் நாகராஜை திருப்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அதிலிருந்து...

வேட்டித் தொழிலுக்கு நீங்கள் திட்டமிட்டே வந்தீர்களா?

அப்படியில்லை. 1976ல் பதினோறாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) படித்தேன். 8 பாடங்களில் 7ல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். தட்டச்சு பாடத்தில் 33 மதிப்பெண்தான் பெற முடிந்தது. அதற்கு காரணம் வெளியே டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் 1 மணிநேரம் சென்று கற்க மாதம் 15 ரூபாய் கட்டணம் செலுத்த வசதியில்லை. அதனால் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு கம்பெனியில் விற்பனையாளராக பணிபுரிந்தேன். ஆந்திராவுக்கு அடிக்கடி சென்று வர வேண்டியிருந்தது. அதில் வேட்டிதான் முக்கியத்துவம் வகித்தது.

கிராமப்புற நெசவாளர்கள் விற்பனைக் கான வேட்டியை கடைக்கு கொண்டு வருவார்கள். அவர்களுக்காக 11 மணிக்கு வங்கிக்குச் சென்று பணம் எடுத்துவந்து விடுவோம். ஆனால் கடை முதலாளி மாலை 6 மணிவரை அவர்களை காக்க வைத்து பணம் கொடுப்பார்கள். அதற்கு பிறகு கடைசி பஸ்ஸை பிடிக்க அவர்கள் அடித்துபிடித்து ஓடுவார்கள். அது என் மனதை மிகவும் பாதித்தது.

நம்மதான் பணத்தை 11 மணிக்கே எடுத்துட்டு வந்துடறமே. அப்பவே நெசவாளிக்கு பணம் கொடுத்து அனுப்பிடலாமே என கடை முதலாளியிடம் கேட்டால், அப்படியெல்லாம் குடுக்கப் படாதுப்பா, அப்படி செஞ்சா அவன் வேற கடைக்கு சரக்கு கொண்டு போயிடுவான்னு பதில் வரும்.

இது எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. இவங்களுக்காக நாம் ஏன் வேட்டியவே மூலதனமா வச்சு ஒரு தொழில் தொடங்கக்கூடாது. அப்படி தொடங்கி முதல்ல இவங்களுக்கான மரியாதையை அங்கீகாரத்தை கொடுக்கணுமுன்னு நினைத்தேன். அப்படித்தான் முதல் கடையை ஆரம்பித்தேன். என்னோட பார்ட்னர் தொழில் நஷ்டம்ன்னு சொல்லி 85,000 ரூபாய் மதிப்புள்ள விற்காத சரக்கைத்தான் தனது பங்காகக் கொடுத்தார். அதையே மூலதனமாக்கினேன்.

வேட்டிக்கு உடனே அங்கீகாரம் கிடைத்ததா?

எப்படி கிடைக்கும்? அந்த காலத்துல 50 ரூபாய்க்கு மேல ஒரு வேட்டி விற்பனை ஆகாதுன்னு உறுதியா இருந்தாங்க. அந்த விலைக்கு ரொம்ப குறைச்சலான தரத்துலதான் வேட்டிகள் வந்துட்டு இருந்தது. அப்படிப்பட்ட வேட்டி கிழிஞ்சு போனா என்ன செய்யறதுன்னு கூடவே ஒரு மஞ்சப்பையில ஒரு வேட்டியை ஸ்டெப்பினி மாதிரி கொண்டு போவாங்க. வேட்டியை கூனிக்குறுகற, ஏழ்மைக்கான அடையாளமாக இல்லாமல் கம்பீரமான ஆடையா மாத்தணும்ன்னு ஒரு கனல் எனக்குள்ள இருந்துட்டே இருந்தது.

வேட்டின்னா 50 ரூபாய்ன்னு இருந்ததை மாற்றினேன். தரம்தான் முக்கியம்ன்னு எடுத்த எடுப்பிலேயே பல ஆயிரம் வேட்டிகளை தயாரித்து கடை கடையா போட்டேன். நல்ல நூல், நல்ல தரம், ரூபாய் 100, ரூபாய் 150ன்னு விலை வைத்தேன். கடைக்காரங்க வாங்க மறுத்தாங்க. நான் விடலை. நீங்க வித்துட்டு பணம் கொடுங்க, இல்ல வேட்டியை திருப்பி கொடுங்க எடுத்துக்கிறேன்னு உறுதி கொடுத்தேன். அப்படி கொடுத்த வேட்டிகள் எல்லாம் சீக்கிரமே விற்பனையாகி 5க்கு 10ஆக கூடுதலாக ஆர்டர் கிடைத்தது.

விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம்?

வேட்டின்னா நெகட்டிவ்வாகவே பார்த்த நம்ம ஜனங்களோட மனசை மாத்தறது எப்படி? வெள்ளை வேட்டின்னா யானைகள் மிரளும், ஆளை துரத்தும்ங்கறது பொதுவா வழக்கத்தில் உள்ளது. ஆனால் ஒரு கம்பீரமான யானை மிடுக்காக வேட்டி, சட்டை அணிந்த ஒரு மனிதரை தும்பிக்கை தூக்கி சல்யூட் செய்யும் காட்சியை விளம்பரப்படுத்தினேன். அதேபோல் ஹோட்டலில் பொதுவாக வேட்டி அணிந்தவனுக்கு மரியாதை இருக்காது. அதை மாற்றி என் கம்பெனி விளம்பரப் படங்களில் ஸ்டார் ஹோட்டலில் விளம்பரப் பெண் வேட்டி அணிந்தவருக்கு ரோசாப்பூ கொடுக்கிற மாதிரி, ஆயிரம் பேர் வரிசையாக கோட்-சூட்டில், வேட்டி அணிந்த முதலாளியை வரவேற்பது போலவும், அவரிடம் கையெழுத்து வாங்க க்யூவில் நிற்பது, ஸ்டார் ஹோட்டல் 8 அடி உயர கூர்க்கா, பென்ஸ் காரில் வந்திறங்கும் 6 அடி உயரமுள்ள வேட்டி கட்டினவரை பார்த்து வளைந்து கும்பிடுவது மாதிரியெல்லாம் காட்சிகள் அமைக்கப்பட்டது. இவ்வளவு ஏன் குட்டி, சுட்டீசுக்காக வேட்டி, சட்டை அணிந்த பசங்களை வைத்து விளம்பரப்படம் மட்டும் ஒரு வருடம் காட்டப்பட்டது. அதன் பிறகுதான் அதன் தயாரிப்பையே வெளியில் கொண்டு வந்தேன். விளம்பரத்தை மிஞ்சிய தரத்தையும், கம்பீரத்தையும் கொடுப்பதாலேயே எங்கள் தயாரிப்புகள் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக விற்க ஆரம்பித்தது.

வேட்டியை முன் வைத்து நடக்கும் சர்ச்சைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நம்ம ஒரு பொருளை தங்கமா தயாரித்தாலும் அதற்கு சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லைன்னா மரியாதையும் கிடைக்காது. இதை 30 வருஷமா வேட்டி கட்டியிருப்பதால் அனுபவித்திருக்கிறேன். வேட்டி கட்டிக்கிட்டு பேங்க்குக்கு போனா பேண்ட் போட்ட ஆபீஸ் பையனையே மேனேஜர் முதலில் கூப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். முனிசிபாலிட்டி முதல் ஹோட்டல் வரை இதுதான் நிலைமை. ஒரு நட்சத்திர விடுதியில என் நண்பர்களோட போனேன். பேண்ட் சட்டையில் இருந்த 9 பேரை உள்ள விட்டுட்டு என்னை வெளிய நிறுத்திட்டாங்க. இப்போது குமரி முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை பொறுப்பில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும், எல்லா அரசு அலுவலர்களும், அனைத்து ஆன்மீக வாதிகளும் ஒன்றாக இணைந்து ஒருமித்த குரல் கொடுத்தது வேட்டிக்காக மட்டும்தான்.

velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x