Published : 06 Dec 2022 09:10 AM
Last Updated : 06 Dec 2022 09:10 AM

FIFA WC 2022 அலசல் | முதல் 35 நிமிடங்களில் தென் கொரியாவின் கதையை ‘குளோஸ்’ செய்த ‘ஜீனியஸ்’ பிரேசில்!

கத்தாரில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பையில் நேற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரேசில் - தென் கொரியா ஆட்டம் பிரேசிலின் அதிரடி ‘ஜீனியஸ்’ வீரர்களால் ஒன்றுமில்லாமல் போய் முதல் 35 நிமிடங்களிலேயே பிரேசில் 4 கோல்களை திணிக்க தென் கொரியா வெறும் ஆறுதல் கோல் ஒன்றை அடித்து வெளியேற பிரேசில் காலிறுதிக்கு முன்னேறியது.

பிரேசில் வெற்றி பெறுகிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், பிரேசில் வீரர்களின் ஆட்டம், பாஸ்களின் ஒத்திசைவு கோல் அடிக்க களத்தில் ‘செட்’ செய்வது ஆகியன ஒரு சிம்பனி இசை போன்ற சேர்க்கை, கோர்வையாக நடைபெறுவதுதான் பிரேசில் கால்பந்தாட்டத்தின் தனிப்பட்ட அழகு, தனித்துவச் சிறப்பு.

மேலும், ஆசிய அணிகளோ பிற சிறிய அணிகளோ உலகக் கோப்பைப் போன்ற பெரிய கால்பந்து தொடரில் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்போது பெரிய அணிகளின் ஆட்டம் குரூப் ஸ்டேஜ் ஆட்டத்திலிருந்து வேறுபட்டிருக்கும் என்பதை அறியாமல்தான் ஆடுகின்றனர். உதாரணத்திற்கு நெதர்லாந்து - யுஎஸ்ஏ ஆட்டத்தை எடுத்துக் கொள்வோம். கள வியூகத்திலேயே அமெரிக்கா தப்பு செய்தது. நடுக்களத்தில் கொண்டு போய் 4 வீரர்களை நிறுத்தியது.

இதனால் என்ன ஆகும் என்றால் இவர்கள் தங்களுக்குள்ளேயே ஆடி நேரத்தை வீணடிப்பதில் முடிவதோடு ஒரு எதிர்த்தாக்குதல் மூவ் எதிரணிக்கு வாய்த்தால் அங்கு கோல் அருகே தடுக்க ஆளில்லாமல் போய் விடும் அதுதான் அன்று யு.எஸ்.ஏ. 3 கோல்கள் வாங்கி தோல்வி தழுவியதற்குக் காரணம். பெரிய அணிகள் நாக் அவுட் ஆட்டங்களில் எதிரணியினரின் ஆசையைத் தூண்டுமாறு நிறைய வெளிகளைக் கொடுப்பார்கள், ஆனால் அது பொறியில் சிக்க வைக்கும் உத்தியே.

அர்ஜென்டினா - ஆஸ்திரேலியா போட்டியிலும் இப்படித்தான் ‘ஆக்ரோஷம்’ என்று தவறாகப் புரிந்து கொண்டு முன்களத்தில் அதிக வீரர்களை வைத்துக் கொண்டு பின் களத்தில் ஓரிருவரை வைத்து ஆடியதால் வந்த வினைதான் அன்றும். இதேதான் போலந்து அணிக்கும் நடந்தது பிரான்ஸ் அணியிடம் 3-1 என்று தோற்றது. கைலியன் மபாப்பே கடைசியில் அடித்த 2 ஜீனியஸ் கோல்களில் போலந்தின் விதி முடிந்தது. பெரிய அணிகள் குரூப் ஸ்டேஜில் ஆடுவது வேறு, நாக் அவுட் சுற்றுகளில் ஆடுவது வேறு என்பதை சிறிய அணிகள் அதுவும் முதல் முதலாக நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும் அணிகள் அறிந்து கொள்வது அவசியம்.

இதே கதைதான் நேற்று தென் கொரியாவுக்கும் நடந்தது, ஆனால் பாடம் கொஞ்சம் கடினமான தண்டனையாக முடிந்தது. ஆஃப் டைமுடன் ஆட்டத்தை நிறுத்தியிருக்கலாம், ஆனால் விதிமுறைகள் முழு 90 நிமிடங்கள் ஆட வேண்டும் என்று உள்ளதே! 76-வது நிமிடத்தில் தென் கொரியா தன் வாழ்நாள் முழுதும் நினைவு வைத்துக் கொள்ளும் அந்த கோல் வந்தது.

ஃப்ரீ கிக் ஒன்றை பிரேசிலின் காஸிமிரோ தலையால் முட்டி கிளியர் செய்யும் முயற்சியில் பந்து கொரிய வீரர் சியுங் ஹோ பைக்கிடம் வர சற்றே தொலை தூரத்திலிருந்து அடித்த ஷாட் ‘உங்களுக்கு நான் சளைத்தவனல்ல’ என்று கூறும் விதமான ஷாட் நேராக பிரேசில் கோல் கீப்பர் ஒன்றும் செய்ய முடியாதபடி கோலுக்குள் சென்றது.

இந்த அற்புதமான கோல் தென் கொரிய வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத கோலாக நினைவில் தங்கும். மற்றபடி இந்த ஆட்டம் தென் கொரிய வீரர்களுக்கு சிம்ம சொப்பனம்தான்.

35 நிமிடங்களில் தென் கொரியா ‘குளோஸ்’ ஆன கதை: நெய்மர் சொன்னபடியே மீண்டும் அணிக்குள் வந்தது பிரேசில் அணியின் உச்சபட்ச உற்சாகத்திற்கும் ஆக்ரோஷத்திற்கும் அழகியலுக்கும் காரணமாக அமைந்தது. ஆட்டத்தின் 9வது நிமிடத்தி அமைந்தது அந்த அட்டகாச மூவ். வலது விங்கில் ரபீனியோ கொரிய வீரர் ஹவாங் பியோமைக் கடைந்து பந்தை பாக்சுக்குள் கொண்டு வந்தார். பிறகு நெய்மாருக்கு வெட்டி அனுப்பினார்.

நெய்மரால் பந்தை கோலுக்குள் செலுத்துமாறு கனெக்ட் செய்ய முடியவில்லை. பந்து உருண்டு இடதுபுறம் நின்று கொண்டிருந்த வினிஷியஸ் ஜூனியரிடம் செல்ல அங்கு அவர் மார்க் செய்யப்படாமல் இருந்தார், அவருக்கு நிறைய நேரமும் இடமும் இருந்ததால் கோலாக மாற்ற பிரேசில் 1-0.

11வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் ஒன்றை கிளியர் செய்ய முயற்சித்தார். ஆனால் பந்து கோல் பகுதியான பாக்சுக்குள் வந்தது, இதனையடுத்து கிளியர் செய்ய முயன்றார். ஆனால் பிரேசில் வீரர் ரிகார்லிசன்னைத்தான் அவரால் உதைக்க முடிந்தது, பெனால்டி பகுதிக்குள் இது நடந்ததால் நேரடியாக பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது. நெய்மர் பெனால்டி கிக்கை எடுத்தார். அவர் ஓடி வந்து அடிக்கும்போதே தென் கொரிய கோல் கீப்பர் கிம் சியூங் க்யூ எந்தப் பக்கம் அடிக்கப் போகிறார் என்ற குழப்பத்தில் தடுமாறிக் கொண்டிருக்க நெய்மர் பந்தை சற்றே மெதுவாகத்தான் வலது கீழ்பகுதியில் கோலுக்குள் திணித்தார் 2-0.

தென் கொரியா மிகவும் அதிர்ச்சியடைந்தது. இனி என்ன செய்யப்போகிறோம் என்ற நிலையில் ஹுவாங் ஹீ-சான் 17வது நிமிடத்தில் இடது புறத்திலிருந்து அதிரடியாக உள்ளே புகுந்து பாஸ்களை மேற்கொண்டு 30 அடி தூரத்திலிருந்து பவர் ஷாட் ஒன்றை கோலின் வலது மேல் மூலைக்கு அடித்தார், ஆனால் பிரேசில் கோல் கீப்பர் அலிசன் பாய்ந்து அதை மேலே தட்டி விட்டார். செம ஷாட்! செம சேவ்!

ரிகார்லிசன்னின் அற்புதமான ‘தலை’ ட்ரிக்! - 29வது நிமிடத்தில் பிரேசிலுக்கே உரித்தான அந்த அற்புதம் நிகழ்ந்தது. தென் கொரியா பந்தை கிளியர் செய்யும் முயற்சியில் பந்து மேலாக ரிகார்லிசன்னுக்கு வர அவர் பந்தை தலையில் வாங்கி தலையாலேயே மூன்று முறை ட்ரிப்ளிங் செய்தார். பிறகு பந்தை அற்புதமாக தன் பாதத்திற்கு இறக்கி தன்னை மார்க் செய்து மறிக்கும் கொரிய வீரருக்கு போக்குக் காட்டி பந்தை மார்க்கின்ஹோஸுக்கு அனுப்பி விட்டு வலது புறம் உட்புறமாக விறுவிறுவென கோல் பாக்சுக்குள் நுழைந்தார் ரிகார்லிசன்.

பந்தை வாங்கிய மார்க்கின்ஹோஸ் அதனை தியாகோ சில்வாவுக்கு பாஸ் செய்தார். அவர் உடனேயே அங்கு இதற்காகக் காத்திருந்த ரிகார்லிசன்னுக்கு அனுப்பினார். அங்கு தன் இடது பாத உதையின் மூலம் பந்தை கோலின் இடது கீழ் மூலைக்கு செலுத்தினார் ரிகார்லிசன், மிகவும் அற்புதமான ஒரு ஆட்டம் இதனை மீண்டும் மீண்டும் கண்டு களிக்க வேண்டும். டீம் கோல் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்! பிரேசில் 3-0.

30 நிமிடங்களுக்குள் 3-0 என்று ஆப்பு வைக்கப்பட்டது. 35-வது நிமிடத்தில் களத்தின் உள் இடது புறத்தில் நெய்மர் மேஜிக்கினால் வினிஷியஸ் ஜுனியரிடம் பந்தை அனுப்ப அங்கு வினிஷியஸ் செய்த பாஸ் அற்புதத்தின் உச்சம், போதிய வேகம் இருக்க வேண்டும் போதிய உயரம் இருக்க வேண்டும், எதிரணி வீரருக்கு அகப்படக் கூடாது அதே வேளையில் அங்கு நின்று கொண்டிருக்கும் பிரேசில் வீரர் பக்கெட்டாவுக்கும் செல்ல வேண்டும் அத்தனை துல்லியமான ஜீனியஸ் ரக பாஸ் அது. பக்கெட்டா அதை இடது பக்கவாட்டு பாத உதையினால் கோலாக மாற்ற பிரேசில் 4-0 என்று முன்னிலை. அங்கேயே தென் கொரியாவுக்கு ஆணியறையப்பட்டு விட்டது.

மீதி ஆட்டமெல்லாம் வெறும் பார்மாலிட்டியாகப் போனது, அந்த 76வது நிமிட தென் கொரியாவின் அற்புத கோலைத் தவிர. காலிறுதியில் பிரேசில் அணி குரேஷியாவைச் சந்திக்கிறது. அதுவும் குரேஷியாவின் மோட்ரிச், பெரிசிச் நல்ல பார்முக்கு வந்திருக்கும் நிலையில் பிரேசிலுக்கு கொஞ்சம் சோதனை உள்ளது, ஆனால் இப்போதிருக்கும் பார்மில் பிரேசிலை முறியடிப்பது என்பது கனவே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x