Published : 06 Dec 2022 06:51 AM
Last Updated : 06 Dec 2022 06:51 AM

FIFA WC 2022 | செனகல் அணியை 3-0 என வீழ்த்தியது இங்கிலாந்து: சாதனை தக்கவைப்பு

கோல் அடித்த மகிழ்ச்சியில் ஹாரி கேன்.

அல் ஹோர்: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இங்கிலாந்து. கால் இறுதி சுற்றில் இங்கிலாந்து அணியானது நடப்பு சாம்பியனான பிரான்ஸுடன் மோதுகிறது.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நேற்று நள்ளிரவு தோகாவின் அல் ஹோரில் உள்ள அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து – செனகல் அணிகள் மோதின. 31-வதுநிமிடத்தில் செனகல் ஸ்டிரைக்கர் பவுலேயி டியா மின்னல் வேகத்தில் பந்தை கடத்திச் சென்று இலக்கை நோக்கி வலுவாக உதைத்தார். இங்கிலாந்து டிபன்டர்களின் கவனக்குறைவால் இது கோலாக மாறியிருக்க வேண்டும். ஆனால் கோல் கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்டு அற்புதமாக ஒற்றை கையால் தடுத்துவிட்டார்.

இதனால் இங்கிலாந்து அணி கோல் வாங்குவதில் இருந்து தப்பித்தது. இதன் பின்னர் இங்கிலாந்து அணி ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தது. 38-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர்கள் பந்தை அருமையாக கடத்திச் சென்று ஜூட் பெல்லிங்ஹாமிடம் கொடுக்க அவர், செனகல் அணியின் இரு டிபன்டர்களுக்கு ஊடாக பாக்ஸின் மையப்பகுதியில் இருந்த ஜோர்டான் ஹென்டர்சனுக்கு தட்டிவிட்டார். அவர், அதை கச்சிதமாக கோல் வலைக்குள் திணிக்க இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.

2-வது கோலையும் இங்கிலாந்து மின்னல் வேகத்தில் அடித்தது. 45-வது நிமிடத்தில் சக அணி வீரர்கள் விரைவாக கடத்திக் கொடுத்த பந்தை பில் ஃபோடன், ஹாரி கேனுக்கு அனுப்பினார். அவர், கோல் கீப்பர் தடுப்பு அரணை மீறி அற்புதமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

57-வது நிமிடத்தில் பில் ஃபோடனின் கிராஸை பெற்ற புகாயோ சகா 6 அடிதூரத்தில் இருந்து கோல் அடிக்க இங்கிலாந்து அணி 3-0 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது. செனகல் அணியால் கடைசி வரை போராடியும் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

பிரான்ஸுடன் மோதல்..: வரும் 10-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு அல் பேத் மைதானத்தில் நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியானது நடப்பு சாம்பியான பிரான்ஸ் அணியுடன் மோதுகிறது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தியது. பிரான்ஸ் அணி தரப்பில் கிளியான் பாப்பே 2 கோல்களும், ஆலிவர் கிரவுடு ஒரு கோலும் அடித்தனர்.

சாதனை தக்கவைப்பு: செனகல் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இதுவரை தோல்வி அடைந்ததில்லை என்ற சாதனையை தக்க வைத்துக்கொண்டது இங்கிலாந்து அணி. உலகக் கோப்பைகளில் 8 ஆட்டங்கள் உட்பட ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக 21 முறை மோதியுள்ள இங்கிலாந்து அணி ஒன்றில் கூட தோல்வியை சந்திக்கவில்லை.

12 கோல்கள்…: 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரை இறுதியில் தோல்வியடைந்து 3-வது இடத்துக்கான ஆட்டத்திலும் வீழ்ந்த இங்கிலாந்து அணி ஒட்டுமொத்தமாக 12 கோல்கள் அடித்திருந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் அந்த அணி ஒரே தொடரில் அடித்த அதிக கோல்களாக இது இருந்தது. இந்நிலையில் தற்போது கத்தார் உலகக் கோப்பையில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றை கடந்துள்ள இங்கிலாந்து அணி 12 கோல்களை வேட்டையாடி உள்ளது.

52: செனகல் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் 2-வது கோலை ஹாரி கேன் அடித்தார். இது சர்வதேச அரங்கில் ஹாரி கேனின் 52-வது கோல் ஆகும். இங்கிலாந்து அணிக்காக அதிக கோல்கள் அடித்துள்ள வெய்ன் ரூனியின் (53 கோல்கள்) சாதனையை எட்ட ஹாரி கேனுக்கு மேற்கொண்டு ஒரு கோல் மட்டுமே தேவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x