Published : 05 Dec 2022 07:59 PM
Last Updated : 05 Dec 2022 07:59 PM

ஸ்டோக்ஸின் அபார கேப்டன்சி... புதிய பாதையில் இங்கிலாந்து... 'டெட்’ பிட்ச்சிலும் பாகிஸ்தானை வென்றது எப்படி? - ஓர் அலசல்

பென் ஸ்டோக்ஸ்

ராவல்பிண்டி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அற்புதமான ஓர் அரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி களத்தில் அந்த அணியின் அபார வெற்றிக்கு கிடைத்து அறுவடை. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 1-0 என்று இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் கேப்டன்சி தரம் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளது என்றே கூற வேண்டும்.

அதாவது, முன்பெல்லாம் இது போன்ற பிட்ச்சைப் பார்த்தாலே ‘ஓ’ என்று அழுது, இப்படி பிட்சைப் போட்டு விட்டார்களே என்று புலம்பித் தள்ளி டெஸ்ட் கிரிக்கெட் செத்து விடும் சப் காண்டினண்ட் கிரிக்கெட் உருப்படாது என்று விளையாடும் வீரர்களும், முன்னாள் வீரர்களும், இங்கிலாந்தின் மீடியாக்களும் புலம்பி மூக்கு சிந்தும். ஆனால் இந்த ராவல்பிண்டி டெட் பிட்சில் வெற்றி பெற முடியும் என்பதை குறைந்தது இங்கிலாந்து முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள், ஊடகங்கள் ஆகியோருக்கு பென் ஸ்டோக்ஸ் தன் அற்புத கேப்டன்சி மூலம் நிரூபித்துள்ளார். இதுதான் இங்கிலாந்தின் புதிய பாதை!! இனி டெட் பிட்ச் என்றால் அழுகை இல்லை. அதிலும் ஆக்ரோஷம், வெற்றியே! என்று மற்ற அணிகளை எச்சரிக்கிறார் ஸ்டோக்ஸ்.

எப்போது பிரெண்டன் மெக்கல்லம் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றாரோ, பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்றாரோ இங்கிலாந்தின் ஆட்டமே புதிய ஆக்ரோஷ பாதைக்கு வந்து விட்டது. முதலில் நியூசிலாந்தை தன் ஆக்ரோஷ பேட்டிங்கினால் நிலைகுலையைச் செய்து 3-0 என்று ஒயிட்வாஷ் கொடுத்தது. பிறகு இந்தியாவுக்கு எதிரான மீதமிருந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 378 ரன்கள் இலக்கை 4வது இன்னிங்ஸில் குறைந்த ஓவர்களில் விரட்டி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தனர்.

பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மெக்கல்லம் பாணி அதிரடி கொஞ்சம் பின்னடைவை ஏற்படுத்த ஒரு டெஸ்ட்டில் படுதோல்வி கண்டது. ஆனால் அடுத்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்களில் வீழ்த்தி பிறகு 3வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இங்கிலாந்து வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இந்த டெஸ்ட் போட்டிகள் அத்தனையிலும் பிரெண்டன் மெக்கல்லமின் உத்தியை தனது கற்பனைவளம் மிகுந்த கேப்டன்சியில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் வெற்றியாக மாற்றினார்.

இந்நிலையில், இங்கிலாந்தின் ‘Bazball’ அதிரடி டீம் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டது. அந்த பழைய பயணத்தின் போது இருந்த வீரர் ஒருவர் இப்போதும் இங்கிலாந்து அணிக்காக பாகிஸ்தான் வந்துள்ளார் என்றால் அது ஜேம்ஸ் ஆண்டர்சன் தான்.

ராவல்பிண்டி பிட்ச் ‘டெட்’ பிட்ச், அல்லது சொத்தை ஆடுகளம் என்ற பெயருக்குரியது. இதில் பந்து ஒன்றுமே ஆகாது, ஸ்பின், வேகப்பந்து வீச்சு இரண்டும் அடித்து நொறுக்கப்படும். இங்கிலாந்து முதலில் பேட் செய்து முதல் நாளிலேயே 500 ரன்களைக் குவித்து டெஸ்ட் ஒன்றில் முதல் நாளில் 500 ரன்களுக்கும் மேல் குவித்த உலக சாதனையை நிகழ்த்தியது. முதல் நாளிலேயே இங்கிலாந்தின் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஹாரி புரூக் போன்றோர் அதிரடி சதம் கண்டனர். இங்கிலாந்து 657 ரன்களை 100 ஓவர்களில் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ரன் ரேட்டில் இதுவரை இல்லாத 6.57 என்ற ரன் ரேட்டில் முடித்தது.

பாகிஸ்தானும் சளைக்கவில்லை. செத்த பிட்சில் அந்த அணியின் அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் சதம் விளாச பாகிஸ்தான், இங்கிலாந்து அளவுக்கு அதிரடியாக ஆட முடியாவிட்டாலும் சரியான பதிலடி கொடுத்து இந்த டெஸ்ட் டிராதான் என்று முடிவெடுக்கும் விதமாக 155 ஓவர்கள் ஆடி 579 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்தின் காட்டடி தர்பாரும், பென் ஸ்டோக்ஸின் அதிரடி டிக்ளேர் மற்றும் அட்டகாச கேப்டன்சியும்: 78 ரன்களே முன்னிலை பெற்றிருந்த நிலையில் இங்கிலாந்து 4ம் நாளில் எப்படி ஆடப்போகிறது? டிராவுக்காகவா அல்லது இந்த டெட் பிட்சில் ஒரு ஸ்கோரை அடித்து பாகிஸ்தானிடம் ஒரு இலக்கை நிர்ணயித்து. அந்த அணிக்கு வெற்றி ருசி காட்டி இழுத்து தோல்வியடையச் செய்வதா என்றெல்லாம் இங்கிலாந்தின் உத்தி என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆடிய விதம் அதன் சமீபத்திய அதிரடி முறைதான். ஜாக் கிராலி 48 பந்தில் அரைசதம் விளாச, ஜோ ரூட் வலது கையிலும் இடது கையிலும் மாறி மாறி ஆடி 69 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் புதிய நட்சத்திரம் ஹாரி புரூக் தன் முதல் இன்னிங்ஸ் அதிரடி ஸ்கோரான 153 ரன்களைத் தொடர்ந்து ஆடுவது போல் ஆடி 2வது இன்னிங்சில் 65 பந்துகளில் 11 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 87 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் ஸ்கோர் 264 ரன்களை எட்டிய போது பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்தார். அந்த டைமிங் தான் இந்த டெஸ்ட் வெற்றியின் பேசுபொருளாக மாறப்போகிறது என்பதென்னவோ உண்மை!!

343 ரன்கள் வெற்றி இலக்கு என்பது பந்துகள் ஒன்றுமே ஆகாத, உடையாத ராவல்பிண்டி பிட்சில் ஒன்றுமில்லை. விரட்டி விடலாம், இந்தியாவாக இருந்தால் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்திருப்பாரா என்பது சந்தேகமே. ஆனால் பாகிஸ்தான் அணியும் முதல் இன்னிங்சில் 3 பேர் சதம் எடுத்துள்ளார்கள். ஆனாலும் ஒன்று நாம் ஜெயிக்க வேண்டும் இல்லையேல் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும், டெஸ்ட் போட்டி வெறும் ரன் மெஷின் டெஸ்ட்டாக முடிந்து விடக்கூடாது என்று ஸ்டோக்ஸ் எடுத்த முடிவு உலகின் மற்ற அணிகளின் கேப்டன்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகும்.

343 ரன்கள் இலக்கை எதிர்த்து பாகிஸ்தான் இறங்கிய போது இந்தப் பிட்சிலும் கூட பாகிஸ்தான் வீரர்கள் ஷார்ட் பிட்ச் பவுலிங்கில், பவுன்சர்களில் திணறுவார்கள் என்று பிளான் போட்டார் ஸ்டோக்ஸ். ஆம் அது உண்மையில் ஒர்க் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் சதம் எடுத்த அப்துல்லா ஷபீக் இரண்டாவது இன்னிங்ஸில் ஷார்ட் பிட்ச் பவுலிங்கிற்கு டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆகி இரையானார். 4ம் நாள் ஆட்டத்தின் பேரிடி என்னவெனில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் 4 ரன்களில் பவுன்சரில் வீழ்ந்ததுதான். முன்னது ஆலி ராபின்சனின் பவுன்சர் என்றால் பின்னது ஸ்டோக்ஸின் பவுன்சர். கேப்டன் விக்கெட்டை கேப்டன் வீழ்த்தினார். 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து பாகிஸ்தான் அணி 4ம் நாளான நேற்று 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று முடித்தது.

கடைசி நாளான இன்று 5-ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்குத் தேவை 263 ரன்கள். இங்கிலாந்துக்கு தேவை 8 விக்கெட்டுகள். பந்து லேசாக ரிவர்ஸ் ஸ்விங் ஆவது தெரிந்தவுடன் இன் ஸ்விங்கர் லெக் திசையில் நெருக்கமாக அதிக பீல்டர்கள் என்ற ஒரு புதிய உத்தியை ஸ்டோக்ஸ் கடைப்பிடித்து பீல்ட் செட் செய்ய இன்று முதலில் இமாம் உல் ஹக் (48 ரன்கள்), ஆண்டர்சனின் லெக் ஸ்டம்ப் நோக்கி வந்த இன்ஸ்விங்கரை தொட்டார் விக்கெட் கீப்பர் ஆலி பாப் கேட்சை எடுத்தார். ஆனால் அதன் பிறகு சாவுத் ஷகீல் (76), முகமது ரிஸ்வான் (46) அட்டகாசமான ஒரு கூட்டணியை அமைத்து ஸ்கோரை 176 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அப்போது அற்புதன் ஆண்டர்சன் அருமையாக ஒரு அவுட் ஸ்விங்கரை வீசி ரிஸ்வான் மட்டையை ஈர்த்தார். அது விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. சாவுத் ஷகீல் அடுத்ததாக ஆலி ராபின்சன் பந்து ஒன்று சற்றே கூடுதலாக எழும்ப இவர் ஆடிய டிரைவ் கவரில் கேட்ச் ஆகியது. பாகிஸ்தான் 198 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அதன் பிறகு இன்னொரு பார்ட்னர்ஷிப் அசார் அலி (40) மற்றும் அகா சல்மான் (30) ஆகியோரிடையே அமைந்தது. இவர்கள் இருவரும் தேநீர் இடைவேளை வரை மேலும் சேதமில்லாமல் ஸ்கோரையும் 257 ரன்கள் என்று பாகிஸ்தானுக்கும் ஒரு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணுமாறு ஆடினர்.

ஆனால், அது அனைத்தும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு மாறியது. ஸ்டோக்ஸின் கேப்டன்சி, இங்கிலாந்தின் பவுலிங், களவியூகம் படு ஆக்ரோஷமாக மாறியது. ஆலி ராபின்சன், ஒரு அருமையான லேட் ஸ்விங்கரை வீசி சல்மானை எல்.பி முறையில் வெளியேற்றினார். இவர் ஆட்டமிழந்த உடனேயே ஸ்டோக்ஸின் பிரில்லியண்ட் களவியூகத்தில் ஜோ ரூட் லெக் ஸ்லிப்பில் கொண்டு வரப்பட்டார். ஆலி ராபின்சன் ஒரு பந்தை ரிவர்ஸ் செய்ய, லேசாகத் அதை தொட்டார் பேட்ஸ்மேன். அது லெக் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. 260 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் மேட்ச் இனி இங்கிலாந்து வெற்றியை நோக்கித்தான் செல்லும் என்ற சூழல் உருவானது. ஆனால் 40 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் எந்தவித மாற்று எண்ணத்திற்கு வழி வகுக்காமல் ஜாகித் மகமூத் மற்றும் ஹாரிஸ் ராவுஃபை ரிவர்ஸ் ஸ்விங்கில் வீழ்த்தினார். இதில் ஜாகித் மகமூத் லெக் சைடு டிராப்பில் வீழ்ந்தார். ஹாரிஸ் ராவுஃப் ரிவர்ஸ் ஸ்விங்கில் எல்.பி ஆனார்.

நசீம் ஷா மட்டும் ஒருமுனையில் விடாப்பிடியாக ஆடி நல்ல தடுப்பாட்ட உத்தியுடன் 46 பந்துகள் தாக்குப்பிடித்து 6 ரன்களை எடுத்தார். ஆனால் இவருக்கு இரண்டு கேட்ச்கள் விடப்பட்டன. கடைசியில் இருள் வரும் நேரம், கொஞ்சம் ஓட்டிவிட்டால் போதும் இருள் காப்பாற்றி விடும் என்று நம்பினர். ஆனால் புதிய பந்து எடுக்கப்பட்டு ஸ்பின்னர் ஜாக் லீச்சிடம் கொடுக்க அவர் நசீம் ஷாவுக்கு ஒரு பந்தை லெக் அண்ட் மிடிலில் வீச அது ‘ஸ்கிட்’ ஆகி கால்காப்பைத் தாக்க அவுட். பாகிஸ்தான் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்து இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. ஆண்டர்சன் 4 விக்கெட், ஆட்ட நாயகன் ஆலி ராபின்சன் 4 விக்கெட்.

அதாவது இரு அணிகளும் முறையே முதல் இன்னிங்சில் 657, 579 என்று பெரிய ஸ்கோரை எட்டியும் டெஸ்ட் போட்டியில் ரிசல்ட் கொண்டு வர முடியும் என்பது இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்சின் புதிய நம்பிக்கைக் கீற்றாகும். பொதுவாக இங்கிலாந்து இப்படியெல்லாம் யோசிக்காது. ஒரு மாதிரி ‘எலைட்’ ஆக ஆடி பாகிஸ்தானில், இந்தியாவில், இலங்கையில் தோற்பதை பெரிதாகப் பொருட்படுத்தாமல்தான் இருந்து வந்தனர். இங்கெல்லாம் வெற்றி பெறுவதும் பெறாததும் ஒன்றே என்ற ஒரு ‘வெள்ளை மேட்டிமை’ பார்வைதான் அந்த அணிக்கு இருந்து வந்தது.

ஆனால், ஸ்டோக்ஸ் அதையெல்லாம் உடைத்து ஒரு கேப்டனாக பெரிய சாதனையைச் செய்திருப்பதோடு இங்கிலாந்து கிரிக்கெட் மனோபாவத்தில் ஒரு சட்டக மாற்றத்தையே (Paradigm Shift) ஏற்படுத்தியுள்ளார் என்றால் மிகையாகாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x