

ராவல்பிண்டி: பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என கணிக்கப்பட்ட ஆடுகளத்தில் இந்த வெற்றியை சாத்தியம் செய்துள்ளது அந்த அணி.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி கடந்த 1-ம் தேதி தொடங்கி இருந்தது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 657 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி பதிலுக்கு 579 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் 78 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து. அதில் 35.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது அந்த அணி.
அது பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தது. ஏனெனில் இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய உகந்ததாக இருந்தது. 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்திருந்தது பாகிஸ்தான். ஐந்தாம் நாளான இன்று இந்த ஆட்டம் பரபரப்பாக தொடங்கியது. உணவு நேர இடைவேளையின் போது ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே பாகிஸ்தான் இழந்திருந்தது. தேநீர் நேர இடைவேளையின் போது மேலும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது பாகிஸ்தான்.
கடைசி செஷனில் 5 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து களம் கண்டது. அதன் பலனாக வெற்றிக்கு தேவையான அந்த 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் ராபின்சன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
“அயலக மண்ணில் இங்கிலாந்து அணி பெற்ற மிகச் சிறந்த டெஸ்ட் வெற்றிகளில் இது ஒன்றாக இருக்கும்” என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது போல இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் பெற்றுள்ள மூன்றாவது டெஸ்ட் வெற்றி இது. 1961 மற்றும் 2000 வாக்கில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.