Published : 05 Dec 2022 01:38 PM
Last Updated : 05 Dec 2022 01:38 PM

FIFA WC 2022 | ரொனால்டோவை திட்டியதால் சர்ச்சை

போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவை தென் கொரிய கால்பந்து வீரர் திட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் 2-1 என்ற கணக்கில் தென்கொரியாவை வென்றது. இந்த போட்டியின்போது 45 நிமிடங்களுக்கு பிறகு அளிக்கப்பட்ட ஓய்வு சமயத்தில் ரொனால்டோவை தென்கொரிய வீரர் ஒருவர் திட்டியதாக போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டஸ் புகார் அளித்துள்ளார். இது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ரொனால்டோவை பார்த்து அந்த தென் கொரிய வீரர் சீக்கிரம் போ என கோபத்தில் சத்தமிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின்போது ரொனால்டோ கூறும்போது, “நான் அவரை (தென் கொரிய வீரர்) அமைதியாக இருக்க சொன்னேன். எனக்கு கட்டளையிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை” என்றார். இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அமெரிக்காவைத் தோற்கடித்து நெதர்லாந்து முன்னேற்றம்: மற்றொரு கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து 3 - 1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவைத் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டம் நேற்று முன்தினம் இரவு காலிஃபா இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே நெதர்லாந்து அணி வீரர் மெம்பிஸ் டிபே ஒரு கோலடித்தார். இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவடைய இருந்த நிலையில் அந்த அணியின் டலே பிளைன்ட் ஒரு கோல் போட்டார். இதனால் இடைவேளையின்போது 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்து இருந்தது.

2-ம் பாதி ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஹாஜி ரைட் ஒரு கோல் அடித்தார். இருந்தபோதும் ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டென்சில் டம்ப்ரைஸ் தனது அணிக்காக 3-வது கோலை அடித்தார். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

நாக் - அவுட்டில் முதல் கோல்: 1,000-ஆவது போட்டியில் விளையாடியதோடு மட்டுமல்லாமல் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்காக முதல் கோலையும் அடித்து அசத்தினார் மெஸ்ஸி. ஃபிரீ கிக் வாய்ப்பில், மெஸ்ஸி அற்புதமான ஒரு கோலை அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார்.

5 உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியுள்ள லயோனல் மெஸ்ஸி, நாக் அவுட் போட்டிகளில் இதுவரை கோல் அடித்ததே இல்லை என்ற குறை இருந்தது. இந்தக் குறையைப் போக்கும் வகையில், நாக் அவுட் போட்டியில் முதல்முறையாக கோல் அடித்து மெஸ்ஸி அசத்தியுள்ளார்.

மாரடோனா சாதனையை முறியடித்த மெஸ்ஸி: 1986-ல் அர்ஜென்டினாவுக்கு உலக கால்பந்து கோப்பையைப் பெற்றுத் தந்தவர் மாரடோனா. 21 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியிருந்த மாரடோனா 8 கோல்கள் அடித்து இருந்தார். அதேபோல் மெஸ்ஸியும் 8 கோல்களுடன் சமநிலையில் இருந்தார். இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்து மெஸ்ஸி தற்போது 9 கோல்களுடன் முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் மாரடோனா சாதனையை முறியடித்துள்ளார்.

1000: நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தனது ஆயிரமாவது போட்டியில் களமிறங்கி புதிய சாதனையை படைத்துள்ளார் இதுவரை அர்ஜென்டினா அணிக்காக அவர் 169 போட்டிகளிலும், பார்ஸிலோனா அணிக்காக 778 போட்டிகளிலும், பிஎஸ்ஜி அணிக்காக 53 போட்டிகளிலும் விளையாடிஉள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x