Published : 15 Jul 2014 10:11 AM
Last Updated : 15 Jul 2014 10:11 AM

நம்ப முடியவில்லை.. கோட்ஸே வியப்பு

உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் கோல் அடித்ததை என்னால் நம்ப முடியவில்லை என்று ஜெர்மனியின் மரியோ கோட்ஸே கூறியுள்ளார்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் முன்பு நடைபெற்ற ஆட்டங்களில் ஜெர்மனி வீரர்கள் பலர் எத்தனையோ கோல்கள் அடித்திருந்தாலும், மரியோ கோட்ஸே இறுதி ஆட்டத்தில் அடித்த அந்த ஒரு கோல் மட்டும் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளது. ஏனெனில் ஜெர்மனிக்கு சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்த பெருமைக்குரிய கோல் அதுவாகும்.

இது தொடர்பாக கோட்ஸே கூறியது:

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நான் கோல் அடிப்பேன் என்றும், அதன் மூலம் அணி சாம்பியன் ஆகும் என்பதையும் நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்போதுவரை என்னால் அதனை முழுமையாக நம்ப முடியவில்லை.

இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எனது அணியையும், நாட்டு மக்கள் அனைவரையும் என்னால் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த முடிந்தது முழு திருப்தி அளிக்கிறது. உலகக் கோப்பையை வென்றது, அதிலும் பிரேசிலில் வைத்து வென்றது என்பது கனவை நிஜமாக்கியுள்ளது. தொடர்ந்து சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு எனது திறமையை மேம்படுத்திக் கொள்வேன். என்று அவர் கூறினார்.

இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனா தோல்வி

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் ஜெர்மனி - அர்ஜென்டீனா இடையே இறுதி ஆட்டம் நடைபெற்றது.

தொடக்கம் முதலே இரு அணிகளும் விறுவிறுப்பாக விளை யாடின. என்றாலும் எதிர்தரப்பை கோல் அடிக்கவிட்டுவிடக் கூடாது என்பதில் அதிக முனைப்பு காட்டின. முக்கியமாக அர்ஜென்டீனா வீரர்கள் இதில் கவனத்துடன் செயல்பட்டனர்.

எனினும் இரு அணிகளுமே அவ்வப்போது கோல் கம்பத்தை நோக்கி பந்தை கடத்திச் சென்றன. ஆனால் அவை எதுவும் கோல் ஆகவில்லை. முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதற்காக ஜெர்மனியின் பாஸ்டினுக்கு 29-வது நிமிடத்தில் நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரிக்கை விடுத்தார்.

30-வது நிமிடத்தில் அர்ஜென் டீனா வீரர் ஹிகுவெய்ன் ஆஃப் சைடு கோல் அடித்ததால், அது கோல் கணக்கில் சேரவில்லை.

தொடர்ந்து ஜெர்மனி வீரர்கள் கோல் கம்பத்தை முற்றுகையிட்டு விளையாடினாலும், பந்து கோல் வலைக்குள் செல்லவில்லை. ஜெர்மனிக்கு கிடைத்த பல கார்னர் கிக் வாய்ப்புகளை அர்ஜென்டீனா வீரர்கள் திறமையாக முறியடித்தனர். 34-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பெனடிக்ட்டும் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார். இரு அணி வீரர்களும் தொடர்ந்து சளைக்காமல் விளையாடியதால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்தது.

இதனால் இரண்டாவது பாதியில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. இம்முறை அர்ஜென்டீனாவின் ஜேவியர், செர்ஜியோ ஆகியோர் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார்கள்.

47-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த ஒரு கோல் வாய்ப்பை அர்ஜென்டீனா கேப்டன் மெஸ்ஸி விரயமாக்கினார். 59-வது நிமிடத்தில் ஜெர்மனி கேப்டன் தாமஸ் முல்லர் ஒரு கோல் வாய்ப்பை வீணாக்கினார். இப்படியே மாறிமாறி இரு அணிகளும் கோல் கம்பந்தை நெருங்கி ஏமாற்றத்துடனேயே திரும்பினர். 90 நிமிடங்கள் முடிந்த பின்னரும் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இரு அணி வீரர்களும் துல்லியம் இல்லாத ஷாட்களை விளையாடியதே பெரும்பாலும் கோல் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. சில வாய்ப்புகளை கோல் கீப்பர்களும் முறியடித்தனர்.

இதையடுத்து கூடுதலாக 15 நிமிடம் ஒதுக்கப்பட்டது. இதிலும் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் கடுமையாக முயன்றும் பலனளிக்கவில்லை. இதனால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டை நோக்கி செல்வது போல தோன்றியது.

எனினும் இரண்டாவது கூடுதல் நேரத்தில் 113-வது நிமிடத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நட்சத்திர வீரர் க்ளோஸுக்கு பதிலாக மாற்றுவீரராக களமிறங்கிய, மரியோ கோட்ஸே தனக்கு கிடைத்த பந்தை நெஞ்சால் தடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை இடது காலால் கோலுக்கு செலுத்தினார்.

அடுத்த நிமிடமே ஜெர்மனி ரசிகர்கள் உற்சாகத்தில் பொங்கினர். அர்ஜென்டீனா ரசிகர்கள் நொறுங்கினர். உலகக் கோப்பை போட்டியின் வெற்றியைத் தீர்மானித்த ஒரே கோலாகவும் அது அமைந்தது. நட்சத்திர, அனுபவ வீரர்கள் பலர் இருந்தும் வெற்றிக்கான கோலை அடித்து அசத்தினார் இளம் வீரர் கோட்ஸே.

ஆட்டம் முடிய 7 நிமிடங்களே இருந்ததால் அர்ஜென்டீனாவின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. எனினும் கடைசி நிமிடத்தில் அர்ஜென்டீனாவுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை மெஸ்ஸி கோலாக மாற்றி ஆட்டத்தை அடுத்த கட்ட பரபரப்புக்கு எடுத்துச் செல்வார் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் மெஸ்ஸி உதைத்த பந்து கோல் கம்பத்துக்கு மேலே சென்றுவிட்டது. அத்துடன் ஆட்டமும் முடிவுக்கு வந்தது. 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்று உலக சாம்பியன் ஆனது.

புதிய வரலாறு

இந்த வெற்றி மூலம் தென் அமெரிக்க கண்டத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையைப் பெற்ற ஜெர்மனி புதிய வரலாறு படைத்தது.

தென் அமெரிக்க கண்டத்தில் இதுவரை 4 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் தென் அமெரிக்க நாடுகள்தான் சாம்பியனாகியுள்ளன. இப்போது 5 வது முறையாக தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் நடந்த போட்டியில் ஐரோப்பிய நாடான ஜெர்மனி பட்டம் வென்று தென் அமெரிக்கா கண்டத்தில் தங்களின் ஆதிக்கத்தை முதல்முறையாக நிலை நிறுத்தியுள்ளது.

மெஸ்ஸிக்கு தங்கப் பந்து விருது

2014-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருது அர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி 4 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார். அர்ஜென்டீனாவை இறுதி ஆட்டம் வரை அழைத்து வந்த பெருமையும் மெஸ்ஸியை சேரும். 3 லீக் ஆட்டங்களில் அர்ஜென்டீனா மொத்தம் 6 கோல்களை அடுத்தது. இதில் 4 கோல்கள் மெஸ்ஸி அடித்ததாகும்.

சிறந்த கோல் கீப்பருக்கான “கோல்டன் கிளவ்” விருது ஜெர்மனி கோல் கீப்பர் நியாருக்கு வழங்கப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் 6 கோல்கள் அடித்த கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் அதிக கோல்களுக்கான கோல்டன் பூட் விருதைப் பெற்றார். 5 ஆட்டங்களில் விளையாடிய அவர் 6 கோல்களை அடித்தார். மேலும் இரு கோல்களை அடிக்க உதவிகரமாக இருந்தார். சிறந்த இளம் வீரருக்கான விருது பிரான்ஸின் பால் போக்பாவுக்கு வழங்கப்பட்டது.

களத்தில் விதிகளை முறையாக பின்பற்றி, நியாயமாக விளையாடும் அணிக்கு வழங்கப்படும் “ஃபேர் பிளே” விருது கொலம்பியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

64 ஆட்டங்களில் 171 கோல்கள்

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 171 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஓர் ஆட்டத்துக்கு சராசரி யாக 2.67 கோல்கள் அடிக்கப் பட்டுள்ளன. மொத்தம் 187 முறை மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 முறை சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டுள் ளனர்.

சாதனையை சமன் செய்தது ஜெர்மனி

இந்த முறை உலகக் கோப் பையை வென்றதன் மூலம் 4 முறை உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற இத்தாலி அணியின் சாதனையை ஜெர்மனி சமன் செய்துள்ளது. உலகக் கோப்பையில் அதிகமுறை(5) சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமை பிரேசில் வசமே உள்ளது.

4 முறை சாம்பியன்

இதற்கு முன்பு 1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் ஜெர்மனி உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2014-ம் ஆண்டில் சாம்பியன் ஆனது மூலம் 4 முறை சாம்பியன் பட்டம் வென்று, அதிக முறை சாம்பியனான அணிகள் பட்டியலில் இத்தாலியுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.

இத்தாலி 1934, 1938, 1982, 2006 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன் ஆனது. பிரேசில் அணி 1958, 1962, 1970, 1990, 2002 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அர்ஜென்டீனாவும்... இறுதி ஆட்டமும்

அர்ஜென்டீனா அணி இறுதி ஆட்டம் வரை முன்னேறி தோல்வியடைவது இது மூன்றாவது முறையாகும். 1930-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டியில் உருகுவே அணியிடம் அர்ஜென்டீனா கோப்பையை நழுவ விட்டது.

1990-ம் ஆண்டு ஜெர்மனி அணியிடம் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனா தோல்வியடைந்தது. இப்போது மீண்டும் ஜெர்மனியிடம் தோல்வியடைந்துள்ளது.

இதற்கு முன்பு 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் அர்ஜென்டீனா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 1978-ம் ஆண்டில் நெதர்லாந்தை வீழ்த்தியும், 1986-ல் ஜெர்மனியை வென்றும் அர்ஜென்டீனா சாம்பியன் ஆனது.

அதிக கோல் அடித்த வீரர்கள்

ஜேம்ஸ் ரோட்ரிகஸ் 6 (கொலம்பியா)

தாமஸ் முல்லர் 5 (ஜெர்மனி)

லயோனல் மெஸ்ஸி 4 (அர்ஜென்டீனா)

நெய்மார் 4 (பிரேசில்)

வான் பெர்ஸி 4 (நெதர்லாந்து)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x