Published : 04 Dec 2022 07:20 PM
Last Updated : 04 Dec 2022 07:20 PM

மெஹதி ஹசன் மிரட்டல் பேட்டிங் - ‘திக் திக்’ ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெஹதி ஹசன் சிறப்பாக ஆடி அணியை வெற்றிபெறச்செய்தார்.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி மிர்புரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா - ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே வங்காள தேச வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணியின் ஷிகர் தவான் 7 ரன்னுடன் வெளியேற, கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்னுக்கு அவுட்டானார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 9 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். ஷ்ரேயஸ் அய்யர் 24 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னும் அடித்தனர். அடுத்தடுத்த வீரர்கள் யாரும் சோபிக்காத நிலையில், இந்திய அணி 41.2 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை கைப்பற்றினார். ஹூசைன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்க தேசம் அணிக்கு நஜ்முல் ஹூசைன் - லிட்டன் தாஸ் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் நஜ்முல் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற, லிட்டன் தாஸ் 41 ரன்களை சேர்த்தார். அனமுல் ஹக் 14 ரன்களிலும், ஷகிப் அல் ஹசேன் 29 ரன்களிலும் அவுட்டாக 26 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 104 ரன்களை சேர்த்திருந்தது வங்கதேச அணி.

அடுத்து வந்த முஷ்ஃபிகுர் ரஹீம் 18 ரன்களிலும், மஹ்முதுல்லா 14 ரன்களிலும், ஆதிஃப் 6 ரன்களிலும் நடையைக்கட்ட வங்க தேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களுடன் 39வது ஓவரில் தடுமாறியது. மெஹிதி ஹசன் மிராஸ் அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் போராடி விளையாடினார். 9 விக்கெட்டுகளிலிருந்த அணியை மெஹதி ஹசன் - முஸ்தபீசூர் ரஹ்மான் இணை நம்பிக்கையுடன் ஆடியது. இதில் அதிரடிக்காட்டிய மெஹதி ஹசன் 39 பந்துகளில் 38 ரன்களையும், முஸ்தஃபீசூர் ரஹ்மான் 10 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிபெறச்செய்தனர். 46 ஓவர்களில் இலக்கை எட்டிய வங்கதேச அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்திய அணி தரப்பில் முஹம்மத் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் சிங் சன், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷர்த்துல் தாக்கூர், தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x