FIFA WC 2022 | மீண்டெழுந்த ஆப்பிரிக்க அணிகள்...

செனகல்
செனகல்
Updated on
1 min read

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இம்முறை ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ, செனகல் ஆகிய இரு அணிகள் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த எந்த ஒரு அணியும் லீக் சுற்றை கடக்கவில்லை. இதன் மூலம் 1986-ம் ஆண்டுக்கு பிறகு கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்ற மோசமான சாதனையை ஆப்பிரிக்க நாடுகள் படைத்திருந்தன.

ஆப்பிரிக்க நாடுகள் பல்வேறு முன்னணி அணிகளுக்கு இம்முறை அதிர்ச்சி தோல்விகளை பரிசாக கொடுத்தது. மொராக்கோ அணி பெல்ஜியம், கனடா அணிகளை வீழ்த்தி எஃப் பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது. செனகல் அணியானது தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்திடம் வீழ்ந்தாலும் அதன் பின்னர் கத்தார், ஈக்வேடார் அணிகளை பந்தாடியது.

பலம் வாய்ந்த பிரேசில் அணியை கடைசி லீக் ஆட்டத்தில் கேமரூன் அணி 1-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் பிரேசிலை வீழ்த்திய முதல் ஆப்பிரிக்க அணி என்ற வரலாற்று சாதனையை கேமரூன் படைத்தது.

36 வருடங்களுக்குப் பிறகு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கால் பதித்துள்ள மொராக்கோ 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின் அணியை வரும் 6-ம் தேதி சந்திக்கிறது. அதேவேளையில் செனகல், இங்கிலாந்துடன் இன்று மோதுகிறது. இது ஒருபுறம் இருக்க லீக் சுற்றுடன் வெளியேறிய துனிசியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அசத்தி இருந்தது.

12 வருடத்துக்குப் பிறகு..: 2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு பிறகு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த அணிகள் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்பது இதுவே முதன் முறையாகும். ஆசியாவில் இருந்துஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா அணிகளும் ஆப்பிரிக்காவில் இருந்து மொராக்கோ, செனகல் அணிகளும் வட அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவும் லீக் சுற்றை கடந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in