Published : 03 Dec 2022 10:27 AM
Last Updated : 03 Dec 2022 10:27 AM

FIFA WC 2022 | பிரமிப்பூட்டும் 91-வது நிமிட கோலால் போர்ச்சுகலை வீழ்த்தி தென்கொரியா தகுதி - கண்ணீருடன் வெளியேறிய உருகுவே!

கத்தார் உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற போர்ச்சுகல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் கொரியா அணி 91வது நிமிடத்தில் தன் 2-வது அற்புத கோலை அடித்து 2-1 என்று வெற்றி பெற்றதால், இதே பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் உருகுவே 2-0 என்று கானாவை வென்றும் இறுதி-16 சுற்றுக்குத் தகுதிபெறாமல் கண்ணீருடன் வெளியேறியது. தென் கொரியாவின் அந்த அற்புத வெற்றி கோல் கானா, உருகுவே இரண்டு அணிகளையும் வெளியேற்றியது. தென் கொரியா சற்றும் எதிர்பாராத விதமாக நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று பிரேசில் அணியை திங்களன்று எதிர்கொள்கிறது.

உருகுவே கானா அணிகள் மோதிய போட்டியில் எந்த அணி வெல்லுமோ இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெறும் என்ற நிலை இருந்தாலும் கோல் வித்தியாச அடிப்படையில் தென் கொரியா ஏதாவது அதிசயம் நிகழ்த்தி விட்டால் உருகுவே, கானா அணிகள் காலி என்ற நிலை இருந்தது, ஆனால் தென் கொரியா அப்படி செய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மேலும் உருகுவே அணியின் பயிற்சியாளர் போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகலுக்கு கொடுத்த பெனால்டிதான் உருகுவேயின் வெளியேற்றத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

உண்மையில் உருகுவே போன்ற திறமையான அணி முதல் போட்டியில் தென் கொரியாவுடன் 0-0 என்று ட்ரா செய்ததும் அதன் பிறகு போர்ச்சுகலுக்கு எதிராக 0-2 என்று உதை வாங்கியதுமே உருகுவேயின் வெளியேற்றத்துக்குக் காரணம். ஒரு டாப் டீம் முதல் 2 போட்டிகளில் கோல் கணக்கைத் தொடங்க முடியவில்லை எனில் உலகக்கோப்பை இறுதி-16க்குத் தகுதி பெற்று என்னதான் செய்து விடப்போகிறது. இன்னொரு புறம் போர்ச்சுகல் தென் கொரியாவுக்கு எதிராக டிரா செய்திருந்தாலே போதும் உருகுவே தன் கானாவுக்கு எதிரான 2-0 வெற்றியில் இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கும். உருகுவே நடுக்கள வீரர் ஜார்ஜியன் டி அரஸ்கேட்டா 26வது நிமிடத்தில் தலையால் முட்டி அடித்த முதல் கோலும் இதற்கு 6 நிமிடங்கள் சென்று அற்புதமாக அடித்த 2வது கோலும் நினைவின் ஒரு பகுதியாக மறைந்து போனதே தவிர உருகுவே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு உதவவில்லை. உண்மையில் உருகுவே பரிதாபம்தான்! ஆனால் அந்த அணியின் இந்த நிலைக்கு அவர்கள்தான் காரணம்.

தென் கொரியாவின் அற்புதமான 2 கோல்கள்! ரொனால்டோ ஏன் முதுகைக் காட்டிக் கொண்டு நின்றார்? தென் கொரியாவுடனான ஆட்டம் தொடங்கியவுடனேயே போர்ச்சுகல் ரிகார்டோ ஹோர்ட்டா கோல் மூலம் 1-0 என்று முன்னிலை பெற்றது ஆனால் இந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 27வது நிமிடத்தில் கொரியாவின் யங் குவான் கிம் ஒரு கோலைத் திருப்ப 1-1 என்று சமன் ஆனது. போர்ச்சுகல் அணியில் 6 மாற்றங்களைச் செய்தார் அந்த அணியின் பயிற்சியாளர் இதுதான் போர்ச்சுகலின் தோல்விக்குக் காரணமானது. இப்படித்தான் தான் தகுதி பெற்று விட்டோம் என்று அன்று பிரான்ஸ் 9 மாற்றங்களைச் செய்து டியுனிசியாவிடம் தோல்வி கண்டது, நேற்று 9 மாற்றங்களைச் செய்த பிரேசில் அணி கேமரூன் அணியிடம் 0-1 என்று அதிர்ச்சித் தோல்வி கண்டது.

தென் கொரியா அணியின் தலைமைப் பயிற்சியாளர் பென்ட்டோ முன்னாள் போர்ச்சுகல் மேலாளராக இருந்தவர் என்பது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். ஆனால் இவருக்கே ரெட் கார்டு காட்டப்பட்டதால் அவர் ஸ்டாண்ட்டில் இருந்தார், இவரது உதவியாளர் செர்ஜியோ கோஸ்டாதான் தென் கொரியா அணியின் வழிகாட்டியாகச் செயல்பட்டார். சிலபல மூவ்களை இவர் அமைத்து கொடுக்க அதன் படியே நடந்த தென் கொரியா அணி போர்ச்சுகலின் தடுப்பு வியூகத்தை பல முறை அச்சுறுத்தியது.

அப்படிப்பட்ட தருணத்தில்தான் போர்ச்சுகல் அணியின் தடுப்பு வியூகத்தின் கூட்டுத் தோல்வியினால் தென் கொரியா புகுந்தது. தென் கொரிய அணியின் கார்னர் ஷாட்டை லீ காங் அடிக்க போர்ச்சுகலின் டேலாட், ரூபென் நெவேஸ் இருவருமே கோலுக்கு அருகே கோட்டை விட பந்து தாண்டிச் சென்றது அங்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏன் முதுகைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தார் என்பது இப்போது வரை புரியாத புதிராகவே உள்ளது. பந்து அவரது முதுகில் பட்டு தென் கொரிய வீரர் கிம் குவான் யங்குக்கு வாகாக வர அவர் கோலுக்கு அருகில் இருந்து இடது காலால் விட்ட உதை போர்ச்சுகல் கோல் கீப்பர் டியாகோ கோஸ்டாவைத் தாண்டி கோலுக்குள் செல்ல தென் கொரியா 1-1 என்று சமன் செய்தது. உருகுவேவுக்கு எதிராகவும் ரொனால்டோ ஒன்றுமே செய்யவில்லை நேற்றும் ஒன்றும் செய்யவில்லை, மாறாக அவரையும் அறியாமல் தென் கொரியாவின் கோலுக்குக் காரணமானார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தால் போதும் யுசிபியோவின் உலகக்கோப்பை கோல் எண்ணிக்கையைச் சமன் செய்வார். ஆனால் அந்த கோல் இதுவரை வரவில்லை. இதில் தென் கொரியா வீரர் ஒருவர் ரொனால்டோவை ‘இன்சல்ட்’ செய்து விட்டார் என்று போர்ச்சுகல் பயிற்சியாளர் புகார் தெரிவித்தார். ‘பேசாம போயிரு’ என்று ரொனால்டோவைப் பார்த்து ஆங்கிலத்தில் கொரிய வீரர் கூறியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆட்டம் முடிய 25 நிமிடம் இருக்கும் போது ரொனால்டோ பெஞ்சிற்கு அழைக்கப்பட்டு பதிலி வீரர் சேர்க்கப்பட்டார். இதனாலும் ரொனால்டோ கோபமாகக் காட்சியளித்தார்.

1-1 என்று சமன் ஆனவுடன் இரண்டாவது பாதியில் தென் கொரியா ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது, ஒரு கோல் அடித்தால் போதும் தகுதி பெற்றுவிடும் உத்வேகம் அந்த அணியிடம் காணப்பட்டது. ஆனால் கோல் வரை சென்றும் வாய்ப்புகள் நழுவி வந்தன ஆட்டமும் முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. 91வது நிமிடம், கூடுதலாக 6 நிமிடங்கள் இருப்பதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

அப்போதுதான் போர்ச்சுகல் தன் 2வது கோலுக்காக தென் கொரியா கோல் பகுதியில் பிரமாதமாக ஒரு மூவை அமைத்து நெருக்கடி கொடுத்தது, வலது புறமிருந்து கோல் பகுதிக்குள் வந்த பந்தை தென் கொரிய தடுப்பு வீரர் உதைத்து அனுப்பியது போர்ச்சுகல் வீரரிடம் செல்ல அவர் ஓங்கி கோலை நோக்கி அடிக்க தென் கொரிய கோல் கீப்பர் கிட்டத்தட்ட கோலை தடுத்து பந்தைத் தள்ளி விட்டார் ஆனால் மீண்டும் போர்ச்சுகல் வீரர் பக்கம் வரவே அவர் தலையால் முட்டி கோலுக்குள் அடிக்கும் முயற்சியும் வீணானது. இதனையடுத்து கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

கார்னர் ஷாட்டை போர்ச்சுகல் வீரர் ஒருவர் தலையால் முட்டி இந்தப் பக்கம் கிளியர் செய்தார், ஆனால் பந்து நேராக கொரியா வீரர் சன் ஹியூங் மின்னிடம் கிடைக்க அவர் தென் கொரியாவின் பகுதியிலிருந்து பந்தை எடுத்து கொண்டு விறுவிறுவென ஓடினார் ஓடினார் ஓடிக்கொண்டே இருந்தார் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினார் என்பது போல். போர்ச்சுகல் வீரர்கள் பின்னால்தான் வர முடிந்தது கடைசியில் 3 போர்ச்சுகல் வீரர்கள் அவரை வழிமறித்தனர், ஆனால் அவர் பந்தை எடுத்துச் சென்று வலது புறத்திலிருந்து மற்றொரு தென் கொரிய வீரர் ஹீ சான் ஹுவாங்குக்கு கிராஸ் செய்ய அவர் வெற்றி கோலாக மாற்றினார். 2-1 என்று வெற்றி பெற்று தென் கொரியா நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அங்கே உருகுவே நட்சத்திர வீரர் சுவாரேஸ் மற்றும் பிற வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

உலகக்கோப்பையில் தென் கொரியாவின் 7 கோல்களில் 4 கோல்கள் 90வது நிமிடம் அல்லது 90 நிமிடங்களைத் தாண்டி அடிக்கப்பட்டது என்ற புள்ளி விவரம் இங்கு சுவாரஸ்யமானதே.

கடைசி கோலுக்காக தென் கொரியாபகுதியிலிருந்து பந்தை எடுத்துக் கொண்டு ஓடி ஓடி உழைத்த சன் ஹியூங் மின் கண்களில் காயத்தினால் முகத்தில் கவசம் அணிந்தபடிதான் ஆடினார். 6 மாதங்களுக்கு முன்பாகத்தான் இவருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது அற்புதமான கடைசி கோல் தென் கொரியாவை இறுதி-16க்குள் கொண்டு செல்ல சிகப்புச் சீருடையினர் ஆனந்தக் கண்ணீர் மல்க கட்டித்தழுவ, மறுபுறம் உருகுவேயின் நட்சத்திர வீரர் சுவாரேஸ் மற்றும் அவரது அணியினர் சோகக் கண்ணீருடன் வெளியேறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x