Published : 15 Dec 2016 07:26 PM
Last Updated : 15 Dec 2016 07:26 PM

கோலியை சச்சினுடன் ஒப்பிட்டுப் பேசலாமா? - ஜெஃப்ரி பாய்காட் கருத்து

2016-ம் ஆண்டில் 16 டெஸ்ட் போட்டிகளில் 1200 ரன்களை 80 என்ற சராசரியில் அடித்துள்ள விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிடுவது தவறு என்று கூறுகிறார் முன்னாள் இங்கிலாந்து வீரரும், வர்ணனையாளருமான ஜெஃப்ரி பாய்காட்.

மும்பை ரோட்டரி கிளப் நிகழ்ச்சியில் இது பற்றி பாய்காட் கூறியிருப்பதாவது:

நாமெல்லோரும் மனிதர்கள். தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் அனைத்தும் எப்போதும், எல்லா காலத்துக்கும் சிறந்தது என்று கருதும் மனோபாவம் கொண்டவர்கள். சுனில் கவாஸ்கரை விட கோலி சிறந்த பேட்ஸ்மெனா? கொஞ்சம் பொறுங்கள். கோலி மிகப்பெரிய வீரராக உருவாகி வருகிறார். ஆனால் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் கிரேட் பிளேயர்கள்தான். நாம் வாழ்க வாழ்க என்று ஒருவரைப் புகழ்ந்து கோஷமிடுகின்றோம், ஆனால் அவர் இறக்கிறார். நம் அனைவருக்கும் இதுதான் நடக்கும்.

நாம் என்ன நினைத்து விடுகிறோம்: அது சச்சின் டெண்டுல்கர்தானா, இவர் உண்மையில் 100 சதங்களை எடுத்திருக்கிறாரா? இவர் கோலியை விட சிறந்தவரா? என்று கேட்கிறோம், இப்படித்தான் நாம் இருக்கிறோம். நாம் எதைப்பார்க்கிறோமோ அதை நம்புகிறோம், அதில்தான் கவனம் செலுத்துகிறோம், ஏனெனில் நாமெல்லோரும் மனிதர்கள்!

கோலி அனைத்து சாதனைகளையும் உடைக்க முடியாது, அப்படி உடைத்தாலும் அது விஷயமல்ல. இதனால் கடந்த கால வீரர்களை விட கோலி சிறந்த வீரர் என்பதாகி விடாது. டெல்லியில்தான் அதிக டெஸ்ட் ரன்களுக்கான கேரி சோபர்ஸ் சாதனையை நான் உடைத்தேன். ஆனால் இது என்னை கேரி சோபர்சை விட சிறந்த பேட்ஸ்மெனாக ஆக்கிவிடவில்லை. கோலி என்ன செய்ய வேண்டுமெனில் ரன்களை குவிக்க வேண்டும், இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத் தர வேண்டும். இதன் பிறகு அவர் கிரிக்கெட் வாழ்வு முடிவடையும் காலத்தில் மற்ற மிகப்பெரிய வீரர்களின் வரிசையில் வைத்து கோலியை மதிப்பிட வேண்டும்.

நான் சதமடித்த போதெல்லாம் இங்கிலாந்து தோற்றதில்லை என்பதை நினைத்து நான் பெருமையடைகிறேன். என்னை டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களில் மலிவாக அவுட் ஆக்க முடியவில்லை எனவே அவர்கள் வெற்றி பெற முடியவில்லை.

கோலி என்ன செய்ய வேண்டுமெனில் தனது இந்த பார்மை அயல்நாடுகளிலும் காட்ட வேண்டும். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்து வரும்போது கோலி தனது பழைய ஆட்டத்தை நேர் செய்ய வாய்ப்புள்ளது. அவர் ஆஸ்திரேலியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் சதங்கள் அடித்தவர்.

இவ்வாறு கூறினார் பாய்காட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x