

அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது சவுராஷ்டிரா அணி. மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ஜெய்தேவ் உனாத்கட் தலைமையிலான அந்த அணி. சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த அணி இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மகாராஷ்டிரா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி இருந்தார்.
249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சவுராஷ்டிரா விரட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷெல்டன் ஜாக்சன் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் 136 பந்துகளில் 133 ரன்கள் குவித்தார். 125 ரன்களுக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 46.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது சவுராஷ்டிரா.
இம்முறை ஜெயதேவ் உனாத்கட் தலைமையில் சவுராஷ்டிரா அணி களம்கண்டது. சமீபத்தில் இந்திய அணியிலிருந்து வெளியேற்றம், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற்றம் ஆகிய சோதனைகளை கடந்து சவுராஷ்டிரா அணிக்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை கனவை நிஜமாக்கி கொடுத்திருக்கிறார் ஜெயதேவ் உனாத்கட்.
தொடர் புறக்கணிப்புகள் இருந்தாலும், 2017ம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபி தொடரில் தோல்வியடைந்ததை அடுத்து, 2021ல் சவுராஷ்டிரா அணியை வழிநடத்தும் பொறுப்பு உனாத்கட்டிடம் கொடுக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுராஷ்டிரா அணி அரையிறுதியில் பலம்வாய்ந்த கர்நாடகா அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் உனாத்கட் அற்புதமாக பந்துவீசி, 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். இப்போது 14 வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் வென்ற பிறகு மைதானத்தில் முழங்கால் இட்டு அமர்ந்த உனாத்கட் கண்கலங்கியபடியே சிறிது நேரம் இருந்தார். இந்தப் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.