

அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது சவுராஷ்டிரா அணி. மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான அந்த அணி. சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த அணி இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மகாராஷ்டிரா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி இருந்தார்.
249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சவுராஷ்டிரா விரட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷெல்டன் ஜாக்சன் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் 136 பந்துகளில் 133 ரன்கள் குவித்தார். 125 ரன்களுக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 46.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது சவுராஷ்டிரா.
இந்தத் தொடரில் தமிழக வீரர் ஜெகதீசன் 830 ரன்களை குவித்து, அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் உள்ளார். உனட்கட், அதிகபட்சமாக 19 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.