

பெர்த்: தந்தை ஷிவ்நரைன் சந்தர்பால் வழியில் தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரைசதம் பதிவு செய்து அசத்தியுள்ளார் டஜ்நரைன் (Tagenarine) சந்தர்பால். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்டுள்ளார்.
26 வயதான அவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்பாலின் மகன். தந்தையை போலவே இவரும் இடது கை பேட்ஸ்மேன்தான். கயானா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் லிஸ்ட் ஏ மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் அவர் விளையாடி உள்ளார். அண்டர் 19 கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய அனுபவமும் கொண்டவர்.
கடந்த ஆகஸ்ட் வாக்கில் வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான நான்கு நாட்கள் போட்டியில் சதம் விளாசி அசத்தினார். அதனால், அவருக்கு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வார்ம்-அப் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் பதிவு செய்தார். அதன் மூலம் பெர்த் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார்.
தனது முதல் டெஸ்ட் போட்டியில் 79 பந்துகளில் 51 ரன்களை எடுத்து அவுட்டானார். அவரது தந்தை ஷிவ்நரைன் சந்தர்பால், அவர் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் 135 பந்துகளை எதிர்கொண்டு 62 ரன்கள் எடுத்திருந்தார். இருவரும் தங்கள் முதல் இன்னிங்ஸில் அரைசதம் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் தான் தந்தையின் பேர் சொல்லும் பிள்ளை என நிரூபித்துள்ளார் ஜூனியர் சந்தர்பால்.