FIFA WC 2022 | களத்தில் கதறி அழுத ஈரான் வீரரை கட்டியணைத்து ஆறுதல் கூறிய அமெரிக்க வீரருக்கு குவியும் பாராட்டு

ரமின் ரெசியனுக்கு ஆறுதல் கூறும் அமெரிக்க வீரர்
ரமின் ரெசியனுக்கு ஆறுதல் கூறும் அமெரிக்க வீரர்
Updated on
1 min read

கத்தார்: அமெரிக்கா - ஈரான் இடையே நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் 1- 0 என்ற கணக்கில் அமெரிக்க அணி வெற்றி பெற்றது. இதில் தோல்வியைத் தாங்க முடியாமல் அழுத ஈரான் வீரரை கட்டியணைத்து ஆறுதல் கூறிய அமெரிக்க வீரரின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

குரூப் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈரான்,அமெரிக்கா ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமெரிக்க அணி முதல் பாதியிலேயே ஒரு கோல் அடித்தது. 38-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் இந்த கோலை அடித்தார். பதில் கோலடிக்க ஈரான் அணியினர் முயற்சி செய்தபோது, அதை அமெரிக்க வீரர்கள் சிறப்பான முறையில் தடுத்தனர். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் அமெரிக்கா புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

இந்தப் போட்டி முடிந்தவுடன், களத்தில் தோல்வியைத் தாங்க முடியாமல் ஈரான் வீரர் ரமின் ரெசியன் அழத் தொடங்கினார். அப்போது அவர் அருகில் வந்த அமெரிக்க வீரர் அண்டோனி ராபின்சன், ரமினை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இந்த வீடியோவை குறிப்பிட்டு தங்களது கருத்தை பதிவிட்டனர்.

அதில் சில ஒருவர், “ஈரானில் மன்னர் ஷா காலங்களில் பாஸ்டனில் கல்லூரியில் நிறைய ஈரானியர்களுடன் நானும் பணிபுரிந்தேன். அவர்கள் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த நண்பர்களாக இருந்தனர். இரு நாடுகளுக்கும் மதம் செய்தது மிகப் பெரிய அவமானம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

மற்றொருவர் “மனித நேயத்தின் சிறந்த காட்சிகள்" என்று பதிவிட்டிருந்தார். இவை ஒருபுறம் இருக்க, அமெரிக்காவுடனான ஈரானின் தோல்வியை அந்நாட்டில் உள்ள குர்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in